முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைத்து விடுமென்ற தவறான நோக்கத்தோடு, திட்டமிட்டு 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கின்றார்கள் - மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

வியாழக்கிழமை, 11 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை : ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைத்து விடுமென்ற தவறான நோக்கத்தோடு திட்டமிட்டு 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கின்றார்கள் என்று மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து மதுரை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கேள்வி: கடந்த ஐந்தாண்டுகளில் 187 ஆணவக் கொலைகள் நடந்திருக்கிறதே?
பதில்: இதிலெல்லாம் தக்க நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. எல்லா ஆட்சிக் காலத்திலும் இதுபோன்ற சம்பவம் நடக்கின்றது.  இதை கட்டுப்படுத்துவதற்காக அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கேள்வி: நீட் தேர்வைப் பொறுத்தவரை நடந்தது என்ன?
பதில்: நீட் தேர்வைப் பற்றி பலமுறை பேசிவிட்டோம்.
கேள்வி: ஸ்டாலின் அந்தக் கருத்தை ஏற்க மறுத்து வெளிநடப்பு செய்திருக்கிறாரே? 
பதில்: ஏற்கனவே 2010-ல் திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரசும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பொழுதுதான் இந்த நீட் தேர்வுக்கே அடித்தளம் போட்டார்கள்.  மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி இருக்கின்ற பொழுது திராவிட முன்னேற்றக் கழகம் மத்தியிலே ஆட்சியில் பங்கு பெற்றிருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் தான் இந்த நீட் தேர்வே வந்தது.  இதற்குக் காரணமே காங்கிரஸ் ஆட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும்தான். இப்பொழுது மக்களிடத்திலிருந்து எதிர்ப்பு வந்த காரணத்தினால், எப்படியாவது அதிலிருந்து தாங்கள் தப்பித்துக் கொள்ள வேண்டுமென்று அந்தப் பழியை எங்கள் மீது சுமத்துவதற்காக திருப்பி விடுகிறார்கள்.  தூங்குகிறவர்களை எழுப்பி விடலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. 
கேள்வி: டிடிவி தினகரன் எதையும் சந்திப்பேன் என்று சொல்லி விட்டு இப்பொழுது வேலூர் தேர்தலில் பின்வாங்குகிறார்.  அ.தி.மு.க. ஆளுமையை கண்டு அச்சப்படுகிறாரா?
பதில்: அதை நீங்கள் அவரிடம்தான் கேட்கவேண்டும். அவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதை தேர்தல் முடிவில் அவரே தெரிந்து கொண்டார், அதனால் விலகி இருக்கிறார்.
கேள்வி: ராஜ்யசபா தேர்தலுக்கு சீட் கொடுக்கவில்லை என்பதால் சிலர் விரக்தியில் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?
பதில்: ஏற்கனவே கூட்டணி அமைக்கின்ற பொழுதே, தேர்தல் உடன்படிக்கையின்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு இடமும், மீதி இரண்டு இடங்களில் ஒன்றை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்ததினால், அருந்ததியினர் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு ஒதுக்கியிருக்கிறோம். அவர் மேட்டூர் நகர கழக செயலாளராக சுமார் 18 ஆண்டு காலம் இருந்திருக்கிறார். இப்படி கட்சியில் நிர்வாகியாக இருந்தவர். அதே போல, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவருக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது, அவருக்கும் இந்த தேர்தலில் கொடுத்திருக்கின்றோம்.  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமிய பெருமக்களுக்கு போட்டியிடுகின்ற ஒரு வாய்ப்பு இல்லாத காரணத்தினால் கூட்டணி ஏற்பட்ட காரணத்தினாலே இப்பொழுது குறையைப் போக்குவதற்காக இஸ்லாமிய மதத்திலிருந்து ஒருவருக்கு ஏற்கனவே அமைச்சராகவும், நகர செயலாளராகவும் பல்லாண்டு காலம் கட்சியிலே உழைத்தவர்.  அப்படி அனுபவம் வாய்ந்த ஒருவருக்குத்தான் நாடாளுமன்ற உறுப்பினராக வழங்கியிருக்கிறோம்.
கேள்வி: காவிரியின் குறுக்கே அணை கட்டுவேன் என்று சொல்லியிருக்கிறார்களே?
பதில்: ஏற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, எந்த அணையும் கட்டக்கூடாது என்று தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள். 15 ஆண்டு காலத்திற்கு யாரும் மேல்முறையீடு செய்யக் கூடாது, எந்த ஒரு அணையும் கட்டக் கூடாது, அங்கே வருகின்ற தண்ணீரை தடுத்து வேறு பக்கம் திருப்பக் கூடாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  அந்த அடிப்படையில் யாரும் அங்கே அணை கட்ட இயலாது.
கேள்வி: சேலம் எட்டு வழிச்சாலை சார்பாக பார்த்திபன், நிதின் கட்காரியைப் பார்த்து எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்திருக்கிறார்...
பதில்: இது மத்திய அரசின் திட்டம், மாநில அரசின் திட்டம் அல்ல என்று பலமுறை ஊடகத்தின் வாயிலாகவும், பத்திரிகை வாயிலாகவும் தெரிவித்து விட்டேன்.  எட்டு வழிச்சாலை ஒரு விரைவுச் சாலை, கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்கள், அதற்குப் பிறகு கேரளத்தில் கொச்சின் வரை இந்த சாலை செல்கிறது. ஏதோ சேலத்திற்கு வருவதைப் போல நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.  இந்த சாலை சேலம் வழியாக செல்கிறதேயொழிய, சேலத்திற்காக இந்த சாலை அமைக்கப்படவில்லை. ஆகவே, சேலத்திலிருந்து சென்னை வரை சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் மிச்சமாகிறது. இதன் மூலம் எரிபொருள் மிச்சமாகிறது, வாகனங்களின் மாசு குறைகிறது. 2001-ல் சாலை அமைத்தார்கள். இன்றைக்கு கிட்டத்தட்ட 19 ஆண்டு காலத்தில் மூன்று மடங்கு வாகனப் போக்குவரத்து அதிகமாகியிருக்கிறது.
இப்பொழுது வாகனங்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதால் அதற்கேற்ற சாலையை அமைத்துக் கொடுப்பது அரசின் கடமை. உயிர்ச்சேதம், விபத்து ஆகியவற்றை தவிர்ப்பதற்காகவும், விரைந்து செல்வதற்காகவும், எரிபொருளை மிச்சப்படுத்துவதற்காகவும், பயண தூரம் குறைவதால் டீசல், பெட்ரோல் மிச்சப்படுவதுடன், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுவதாலும் மத்திய அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்த முன்வந்தது. அதுமட்டுமல்லாமல், ராணுவத் தளவாடங்கள், இராணுவத்திற்குத் தேவையான உதிரி பாகங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகளை அமைப்பதாக சொல்லியிருக்கின்றார்கள், அதற்கும் இந்த பசுமை வழிச் சாலையை அமைப்பது உதவிகரமாக இருக்கும்.
மேலும், புதிய தொழில்கள் வருவதற்கும் உதவிகரமாக இருக்கும். உட்கட்டமைப்பு சிறந்திருந்தால்தான் வெளிநாட்டிலிருந்தும், வெளிமாநிலத்திலிருந்தும் அதிகளவில் தொழில் முதலீடு செய்வதற்கு வருவார்கள்.  இவ்வளவு விஷயங்களையும் அடிப்படையாகக் கொண்டு தான் இந்தச் சாலையை மத்திய அரசு அமைக்கின்றது. ஆனால், இதை பலர் எதிர்க்கின்றார்கள்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், டி.ஆர்.பாலு அவர்கள் மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொழுது 734 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைத்த பொழுது, மக்களிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தவில்லையா? அ.தி.மு.க. அரசு மாநிலத்தில் ஆட்சி செய்கிறது, மத்திய அரசு தான் இந்தத் திட்டத்தை கொண்டு வருகிறது. அப்பொழுது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தவர்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்தி சாலை அமைக்கவில்லையா? இந்தத் திட்டம் வந்தால் ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைத்துவிடுமென்ற தவறான நோக்கத்தோடு, வேண்டுமென்றே திட்டமிட்டு இந்தத் திட்டத்தை எதிர்க்கின்றார்கள். இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்தும்பொழுது, விவசாயிகளுக்குத் தேவையான இழப்பீட்டுத் தொகை கொடுக்கின்றார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தும் பொழுது, நிலத்தில் வீடு கட்டியிருந்தால், அந்த வீட்டிற்கு உண்டான இழப்பீட்டுத் தொகை கழித்துத் தான் இழப்பீட்டுத் தொகை கொடுத்தார்கள். தற்போது, உதாரணத்திற்கு, 10 வருடத்திற்கு முன்பு ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட வீடாக இருந்தாலும், ஆயிரம் சதுர அடிக்கான தொகையை கொடுக்கின்றார்கள். ஒரு ஏக்கருக்குக் கீழ் விவசாய நிலத்தை கையகப்படுத்தினால் அவர்களுக்குத் தேவையான 10 சென்ட் இடத்தைக் கொடுத்து, அரசாங்கமே வீடு கட்டிக் கொடுக்கின்றது, இழப்பீட்டுத் தொகையும் கொடுக்கின்றது. கடந்த காலங்களில் இழப்பீட்டுத் தொகை குறைவாக இருந்தது. இப்பொழுது புதிய இழப்பீட்டுச் சட்டத்தின் வாயிலாக கிட்டத்தட்ட மூன்று மடங்கு கூடுதலாகக் கொடுக்கின்றோம். கடந்த காலங்களில் தென்னை, மா மரங்களுக்கு குறைந்த இழப்பீட்டுத் தொகையே கொடுத்துள்ளார்கள். இப்பொழுது, 15 வருடம் ஆயுட்காலம் உள்ள ஒரு தென்னை மரத்திற்கு ரூபாய் 35 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 40 ஆயிரம் வரை கொடுக்கின்றோம். ஒரு ஏக்கருக்கு 70 மரமிருந்தால் ரூபாய் 22 லட்சம் வரை மத்திய அரசு இழப்பீடாகக் கொடுக்கின்றது. கிணற்றில் பம்ப் செட் வைத்திருந்தால், அவர்கள் வேறு இடத்தில் நிலம் வாங்கினால், போர்வெல்லுக்கு உண்டான இழப்பீட்டுத் தொகை கொடுப்பதுடன், சிறப்புத் திட்டத்தின் வாயிலாக மின்சார இணைப்பு கொடுக்கின்றோம். மாட்டுக் கொட்டகைக்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்கின்றார்கள். எந்தவிதத்திலும் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்று கருதி தான் இந்தத் திட்டத்தை அமல்படுத்த நாங்கள் முயற்சி செய்தோம். இன்றைக்கு பல முட்டுக்கட்டைகள் வந்து கொண்டிருக்கின்றது, அதை மத்திய அரசு சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
கேள்வி: வேலூரில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கின்றது?
பதில்: வேலூரில் அ.தி.மு.க.  கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த சண்முகம் போட்டியிடுகின்றார். உறுதியாக வெற்றி பெறுவார்.
கேள்வி: மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதே?
பதில்: 2.5 சதவிகிதம் தான் உயர்த்தியுள்ளார்கள். இதனால் தங்கம் வாங்குபவர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அந்தளவிற்கு வசதி வாய்ப்பு இருப்பவர்கள் தான் தங்கத்தை வாங்குகின்றார்கள். தங்கத்தையே வாங்க முடியாத அளவிற்கு அடித்தட்டில் வாழ்கின்ற மக்களுக்கு மத்திய அரசு என்ன செய்கிறது என்பதைத் தான் பார்க்க வேண்டுமேயொழிய மாநில அரசாக இருந்தாலும், மத்திய அரசாக இருந்தாலும், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, நசுக்கப்பட்ட கடைக்கோடியில் இருக்கின்ற மக்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்வதுதான் எங்களுடைய லட்சியம். அந்த இலட்சியத்தின் அடிப்படையில் தான் அ.தி.மு.க. செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து