முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சரவையில் 2 இந்தியர்களுக்கு இடம் அளித்த போரிஸ் ஜான்சன்

வியாழக்கிழமை, 25 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பேர் இடம்பெற்றுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதாக மூன்று ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து அறிவித்தது. பொதுவாக்கெடுப்பில் ஆதரவு கிடைத்த போதிலும், நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக டேவிட் கேமரூன் மற்றும் தெரசா மே ஆகிய பிரதமர்கள் பதவியிழந்துள்ளனர்.

இந்நிலையில், புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றுக் கொண்டார். பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி எலிசபெத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். முன்னதாக ராணியைச் சந்திக்க போரிஸ் ஜான்சன் செல்லும் வழியில் பருவநிலை மாற்றத்தை முதலில் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, போராட்டக்காரர்கள் ஜான்சனின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு போலீசார் அப்புறப்படுத்தினர்.

நியூயார்க் நகரில் பிறந்த அவர், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். பின்னர் வார இதழ் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார். 2001 முதல் 2008 வரை எம்.பி.யாகவும், தொடர்ந்து 2016 வரை லண்டன் நகர மேயராகவும் பணியாற்றி வந்த போரிஸ் ஜான்சன், 2 ஆண்டுகள் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நெருங்கிய நண்பரான போரிஸ் ஜான்சன், அவ்வப்போது சர்ச்சைக் கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார்.

போரிஸ் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி பட்டேல் மற்றும் அலோக் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிரீத்தி பட்டேலுக்கு மிக முக்கியத் துறையான உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. போரிஸ் ஜான்சன் எப்போதும் தன்னை இந்தியாவின் மருமகன் என்று கூறிக் கொள்வது வழக்கம். ஜான்சனின் முன்னாள் மனைவி மரினா வீலர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். வழக்கறிஞராக பணியாற்றி வரும் மரினாவும், போரிஸ் ஜான்சனும் கடந்த 1993-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு இருவரும் மணமுறிவு செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து