கோவை சிறுவர்கள் கொலை வழக்கு: குற்றவாளியின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2019      உலகம்
kovai childrens murder case 2019 08 01

புது டெல்லி : தமிழகத்தை உலுக்கிய கோவை சிறுவர்கள் கொலை வழக்கில், குற்றவாளியின் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.

கடந்த 2010-ம்  ஆண்டு கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த சிறுமி முஸ்கான்(11), சிறுவன் ரித்திக்(8) ஆகியோர் வாடகைக் கார் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவரால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் பொள்ளாச்சி அருகே கண்டெடுக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மோகன்ராஜூம், அவரது நண்பர் மனோகரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருந்த போது, குற்றவாளிகளில் ஒருவனான மோகனகிருஷ்ணன், காவல்துறையிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற போது என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். மனோகரன் சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம், பள்ளிக் குழந்தைகள் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மனோகரனுக்கு இரட்டை தூக்குத் தண்டனையும், மூன்று ஆயுள் தண்டனையும் விதித்து கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ல் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிராக மனோகரன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில்  தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மனோகரன் தரப்பில், கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆர்.எப். நாரிமன், சஞ்சீவ் கன்னா, சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கின் இறுதி விசாரணை 2 வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், நாங்கள் மரண தண்டனையை உறுதி செய்கிறோம் என்று ஒரே வரியில் உத்தரவு பிறப்பித்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து