சென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019      ஆன்மிகம்
tirupati  26-10-2018

சென்னையில் மிகப்பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திட்டமிட்டிருப்பதாக திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறியுள்ளார்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பிரம்மாண்ட ஏழுமலையான் கோவில் கட்டும் திட்டம் குறித்து திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  அப்போது அவர் கூறுகையில்,

தமிழகத்தில் இருந்து பெரும்பாலான மக்கள் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர். இதனால், சென்னையில் மிகப்பெரிய விசாலமான ஏழுமலையான் கோவில் கட்ட திட்டமிட்டுள்ளோம். இது குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கலந்து ஆலோசிக்க உள்ளோம்.

இதைத் தொடர்ந்து விரைவில் கோவில் கட்டும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்குவோம். ஏற்கனவே கன்னியாகுமரியில் கோவில் ஒன்றை கட்டியுள்ளோம். இருப்பினும் சென்னையில் பிரம்மாண்ட ஏழுமலையான் கோவில் கட்ட தற்போது திட்டமிட்டுள்ளோம். இதற்கான இடம் குறித்த விவரங்களை தேவைப்பட்டால் ஆந்திர முதல்வர், தமிழக முதல்வரிடத்தில் பேசுவார் என்று கூறினார். இதனையடுத்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மைய தலைவர் கிருஷ்ணா ராவ் கூறுகையில், சென்னையில் பெரிய இடம் கிடைப்பது கடினமான ஒன்று. சில வருடங்களுக்கு முன்னர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெரிய கோவில் கட்ட இடம் அளிப்பதாக உறுதியளித்தார். அப்போது அது நடக்கவில்லை. இப்போது மீண்டும் நாங்கள் இடத்திற்காக காத்திருக்கிறோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து