ராஜஸ்தான் கவர்னராக கல்ராஜ் மிஷ்ரா பதவி ஏற்றார்

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      இந்தியா
Kalraj Mishra sworn 2019 09 09

ஜெய்ப்பூர் : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 1ந்தேதி 5 மாநில ஆளுநர்களை நியமனம் செய்து உத்தரவிட்டார். இதன்படி, தமிழக பாரதீய ஜனதா கட்சித்தலைவராக பதவி வகித்து வந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை (வயது 58), தெலுங்கானா மாநில கவர்னராக நியமித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை பதவி ஏற்றார். அவருக்கு அந்த மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராகவேந்திர சிங் சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் கவர்னர் என்ற பெயரை தமிழிசை பெற்றுள்ளார்.

இதேபோன்று, கேரள கவர்னராக இருந்து வந்த சதாசிவம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டார். இமாசல பிரதேச கவர்னராக பா.ஜ.க. மூத்த தலைவர் பண்டாரு தத்தாத்ரேயா நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதனால் இமாசல பிரதேச ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா (வயது 78) ராஜஸ்தானின் கவர்னராக மாற்றப்பட்டார். மகாராஷ்டிர கவர்னராக பகத் சிங் கோஷ்யாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங்கின் 5 வருட பதவி காலம் நிறைவடைந்த நிலையில் அந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்ட கல்ராஜ் மிஷ்ரா நேற்று முறைப்படி பொறுப்பேற்று கொண்டார்.

முன்னாள் மத்திய மந்திரியான மிஷ்ரா பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல் மந்திரி அசோக் கெலாட், துணை முதல் மந்திரி சச்சின் பைலட், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் குலாப் சந்த் கட்டாரியா, எதிர்க்கட்சி துணை தலைவர் ராஜேந்திர ரத்தோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீபதி ரவீந்திர பட் முன்னிலையில் அவர் பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து