முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில் தொடங்க 41 நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டதால் தாங்கிக் கொள்ள முடியாமல் வெள்ளை அறிக்கை கேட்கிறார் - மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் இ.பி.எஸ் கடும் தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் தொழில் தொடங்க 41 நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டியிருப்பதால் அதை தாங்கி கொள்ள முடியாத மு.க. ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்றத் தொகுதி, மேட்டூரில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாமினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. அரசால் அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இந்த ஆட்சியில் எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்ற ஒரு தவறான குற்றச்சாட்டை அவர் செல்கின்ற இடங்களிலும், பொதுக் கூட்டங்களிலும் பேசி வருகிறார். 2011-ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதிலிருந்து ரூபாய் 3.23 கோடி மதிப்பீட்டில் மேட்டூர் அணைக் கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள 9 ஏரிகளை சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேட்டூர் கிழக்குக் கரை மற்றும் மேற்குக் கரை கால்வாய்களில் செல்கின்ற நீர் வீணாகாமல் கடைமடை பகுதி முழுவதும் தண்ணீர் கிடைக்க வேண்டுமென்பதற்காக நவீன முறையில் கான்கிரீட் கால்வாயாக மாற்றி கொடுக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. முதற்கட்டப் பணி நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் கட்டப் பணிகள் துவங்கப்படவுள்ளன. அரசு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நீரை, முழுமையாக கிடைக்க இத்திட்டத்தை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. இதற்காக சுமார் ரூபாய் 250 கோடி செலவிடப்பட்டிருக்கின்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியினால் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்த சாதனையை விளக்கும் வகையில் மேட்டூர் அணை பூங்காவின் முகப்புப் பகுதியில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் நினைவுத்தூண் கல்வெட்டு பதித்து பூங்காவின் நுழைவுவாயில் புனரமைக்கும் பணியும் முடிக்கப்பட்டுள்ளன.

83 ஆண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருந்த மேட்டூர் அணையை தூர்வாரி சரித்திரம் படைத்த அரசு எங்களுடைய அரசு. முதலமைச்சர் என்ற முறையில் நானே நேரில் வந்து இத்திட்டத்தை தொடங்கி வைத்தேன். இதன் மூலம் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து தங்கள் விளைநிலங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். பருவ காலங்களில் பொழிகின்ற மழைநீரை சேமிக்கும் வகையில்,தொலைநோக்குச் சிந்தனையோடு, ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளை தூர்வாரும் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது முழுக்க, முழுக்க விவசாயிகளை கொண்டே செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தை குறை கூறும் எதிர்க்கட்சியினர், அவர்களது ஆட்சிக் காலத்தில் ஒருஏரியைக் கூட தூர்வாரவில்லை. பொதுப்பணித்துறையின் கீழ் பராமரிக்கப்படும் சுமார் 14,000 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் பராமரிக்கப்படும் சுமார் 26,000 ஏரிகள் என ஆக மொத்தம் தமிழ்நாட்டில் இன்றைக்கு 40,000 ஏரிகள், குளங்கள் உள்ளன. இவைகளை படிப்படியாக தூர்வாரும் வகையில் குடிமராமத்து திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகையினை ஒதுக்கி, குறிப்பிட்ட ஏரிகளை எடுத்துக் கொண்டு குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ரூபாய் 100 கோடியும், இரண்டாம் கட்டமாக ரூபாய் 328 கோடியும் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு, பொதுப்பணித் துறை மூலம் 1,829 ஏரிகளை தூர்வாருவதற்கு ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகளை தூர்வாருவதற்கு ரூபாய் 1,250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஆனால், சிறப்பான இந்தத் திட்டத்தை எதிர்க்கட்சியினர் குறைகூறி கொண்டிருக்கின்றார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். தி.மு.க. ஆட்சியில் மேட்டூர் முதல் கொள்ளிடம் வரை எத்தனை தடுப்பணைகள் கட்டினார்கள்? தமிழகத்திலே அதிக ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர் துரைமுருகன்தான். ஆனால், ஒரு தடுப்பணை கூட தி.மு.க. ஆட்சியில் கட்டவில்லை. இப்படி எதுவுமே செய்யாத தி.மு.க. மற்றும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், எங்களை பற்றி பேசுவதற்கு எந்ததகுதியும் இல்லை என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நான் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்த பொழுது, அங்குள்ள தொழிலதிபர்கள் இன்றைக்கு தமிழ்நாடு வளம் கொழிக்கும் மாநிலமாகவும், தொழில் தொடங்க உகந்த மாநிலமாகவும் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்கள். மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்க 41 தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கிறார்.

அரசு தொழிற்சாலைகளை தொடங்கி வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டுமென்ற லட்சியத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டும். விவசாயிகளின் வாழ்க்கை செழிக்க வேண்டும். அதற்காகத்தான் நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி விவசாயிகளுக்கு போதிய நீர் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வேளாண்மைத் துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அம்மாவின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்த்து, எந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி என்பதை மக்களாகிய நீங்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து