முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

சென்னை : 3 வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காலக்கட்டமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் முடிவடைந்த நிலையில், இந்தியா முழுவதும் இதுவரை கிடைக்க வேண்டிய தென்மேற்கு பருவமழை அளவு 88 சென்டிமீட்டர், கிடைத்துள்ள அளவு 97 சென்டிமீட்டர் ஆகும். வழக்கத்தை விட 10 சதவீதம் அதிக மழைப்பொழிவு கிடைத்துள்ளது. இதே போல தமிழகத்திற்கு 34 சென்டிமீட்டர் மழை கிடைக்க வேண்டிய நிலையில், தற்போது 40 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளது. இது 16 சதவீதம் அதிகமாகும். சென்னையை பொருத்தவரை 44 சென்டிமீட்டர் மழை கிடைக்க வேண்டிய நிலையில், தற்போது 59 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளது. இதில் 34 சதவீதம் அதிகமாகும்.

இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 3 வாரங்களில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு உள் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களில் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த 2 நாட்களுக்கு பிறகு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து