முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் நாடக குழுக்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் வழங்க அரசு திட்டம்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

புதன்கிழமை, 2 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

தமிழகம் முழுவதும் உள்ள நாடக குழுக்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் உதவித்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத் துறையுடன் இணைந்து தென்னிந்திய நாடக கலை விழா கேரள சமாஜத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவை தொடங்கி வைத்து அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.  அப்போது அவர் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்திற்கு நாட்டுப்புற கலைகளை மீட்டுருவாக்கம் செய்வதில் சிறந்த பங்கை வழங்கி வருகிறது. அதற்காக இந்த அமைப்புக்கு நான் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசை பொறுத்தவரை நாட்டுப்புற கலைகளை வளர்க்க நாட்டுப்புற கலைஞர்களுக்கான வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வாரியத்தில் 35 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ஆண்டுக்குள் அதனை ஒரு லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். பாரம்பரிய கலைஞர்களுக்கான ஒன்பது வகையான சலுகைகள், நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டு உலக நாடக தினத்தை தமிழக அரசு கொண்டாட இருக்கிறது. அதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் அமைப்போடு இணைந்து கொண்டாட இருக்கிறோம்.  மாவட்டந்தோறும் பத்து நாடக குழுக்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறோம். அதை விரிவுப்படுத்தி அனைத்து நாடக குழுக்களுக்கும் தலா ரூ. ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்படும். யுனெஸ்கோவோடு சேர்ந்து நாட்டுப்புறக் கலைகளை மீட்டுருவாக்கம் செய்ய மத்திய அரசோடு இணைந்து திட்டமிட்டுள்ளோம். நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் சிறக்க, மத்திய அரசோடு இணைந்து மாநில அரசு புதிய திட்டத்தை விரைவில் அறிவிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாடக குழுக்களுக்கு ஒத்திகையளிப்பதற்காக கேரளம் மற்றும் ஆந்திர மாநிலங்களை போல குறைந்த கட்டணத்தில் நாடக குழுக்களுக்கு அரங்கம் வழங்க வேண்டும் என்று முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன், சென்னையில் கலை பண்பாட்டுத்துறையின் இரண்டு அரங்கங்கள் இருக்கின்றன. அந்த அரங்கங்களில் நாடக குழுக்களை முறைப்படுத்தி தகுதியின் அடிப்படையில் குறைந்த வாடகையில் வழங்க அரசு பரிசீலனை செய்யும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து