சிவசேனாவுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சேர வேண்டும் - தேவகவுடா

புதுடெல்லி : பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்ட சிவசேனாவுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சேர வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியவில்லை. சிவசேனா முதல்-மந்திரி பதவியை கேட்டது. ஆனால் பா.ஜனதா விட்டுத்தர மறுத்து விட்டது. இந்த மோதலால் புதிய அரசு அமைப்பதில் முட்டுக்கட்டை உருவானது.
இந்தநிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே உடன் கூட்டணி அமைத்ததால் மராட்டியத்தில் பாஜகவால் காலூன்ற முடிந்தது. தற்போது சிவசேனாவை புறந்தள்ளி ஆட்சியமைக்க விரும்பும் பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே பாடம் புகட்ட நினைக்கிறார்.
பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்ட விரும்பும் சிவசேனாவுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சேர வேண்டும். சிவசேனாவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. அப்போது தான் காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.