கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது: சச்சின் வேதனை

மும்பை : நல்ல வேகப்பந்துவீச்சாளர்களும், தரமான ஆடுகளங்களும் இல்லாதது கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருவதைக் காட்டுகிறது, இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வேதனை தெரிவித்துள்ளார்.
சுனில் கவாஸ்கர்-ஆன்டி ராபர்ட்ஸ், டென்னிஸ் லில்லி, இம்ரான் ஆகியோர் 1970 மற்றும் 1980களில் கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தும் பந்து வீச்சாளர்களாக இருந்தார்கள். பார்க்கும் ரசிகர்களுக்கு இவர்களின் பந்து வீச்சு உற்சாகத்தையும், விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாகவும் இருந்தது. அடுத்ததாக லாரா, சச்சின், மெக்ராத், வாசிம் அக்ரம் என தரமான, பேட்ஸ்மேன்களும், அவர்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமல் அச்சுறுத்தும் பந்துவீச்சாளர்களும் இருந்து டெஸ்ட்கிரிக்கெட்டைக் கூட பரபரப்பாக்கினார்கள். ஆனால், இன்று தரமான வேகப்பந்துவீச்சும் இல்லை, வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாததால் கிரிக்கெட்டின் தரமும், டெஸ்ட் கிரிக்கெட்டும் அழிவை நோக்கிச் செல்கிறது என்று டெண்டுல்கர் தெரிவித்தார்.
தனது டெஸ்ட்கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து டெண்டுல்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:
எதிரணி என்ற பாரபட்சம் இல்லாமல் அனைத்து மக்களும் ரசித்த கிரிக்கெட் போட்டிகள் இன்று இல்லை. ஏனென்றால், உலகத்தரம் வாய்ந்த சில வேகப் பந்துவீச்சாளர்கள்தான் இப்போது இருக்கிறார்கள். டெஸ்ட் போட்டிக்கான அந்த கூறை நாம் உறுதியாகத் தவற விட்டோம். போட்டித்தன்மை இருக்கிறதா என்றால், டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேதான் அந்த போட்டித்தன்மை இருக்கிறது. கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஆரோக்கியமான, சிறப்பான செய்தி அல்ல. கிரிக்கெட்டின் தரம் உயர வேண்டியது அவசியம். நான் மீண்டும் சொல்கிறேன் கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தும் வேர் என்பது ஆடுகளங்கள்தான்.நாம் நியாயமான ஆடுகளங்களை ஒவ்வொரு போட்டிக்கு வழங்கும் போது, பயன்படுத்தும் போது அது வேகப்பந்துவீச்சுக்கும், சுழற்பந்துவீச்சுக்கும் சமஅளவு பயன்பட வேண்டும். அதே போல பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்களுக்கும் சம அளவு உதவ வேண்டும். இந்த நடுநிலைத்தன்மை போட்டியில் தவறும் போது போட்டி பலவீனமடையும், மக்களின் ஈர்ப்பைப் பெறுவதில் தவறி விடும். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நல்ல தரமான ஆடுகளங்கள் அவசியமானது. நான் சமீபத்தில் பார்த்தவரையில் சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் கோப்பைக்கான ஆடுகளங்கள் தரமானவை. மிகச்சிறப்பானவே என்று சொல்ல முடியும். ஒல்டு டிராபோர்ட், ஹெடிங்கிலி, லார்ட்ஸ் டெஸ்ட், ஓவல் என அனைத்து மைதானங்களிலும் நடந்த டெஸ்ட் போட்டியைக் காண உற்சாகமாக இருந்தது. இவ்வாறு சச்சின் தெரிவித்தார்