நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணி ஓரிரு நாளில் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020      விளையாட்டு
New Zealand cricket series 2020 01 19

பெங்களூரு : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, இந்த மாதம் முதல் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. நியூசிலாந்து தொடருக்கான இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. 20 ஓவர் போட்டி தொடர் ஆக்லாந்தில் வருகிற 24-ம் தேதியும், ஒருநாள் போட்டி தொடர் ஹாமில்டனில் பிப்ரவரி 5-ம் தேதியும், டெஸ்ட் போட்டி தொடர் வெலிங்டனில் பிப்ரவரி 21-ம் தேதியும் தொடங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு பெங்களூருவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஹர்திக் பாண்ட்யாவின் உடல் தகுதி அறிக்கை கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக இந்த அணி தேர்வு இன்னும் ஓரிரு நாளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் சிறப்பாக விளையாடி வரும் லோகேஷ் ராகுலை எந்த வடிவிலான போட்டிக்கான அணியில் இருந்தும் தவிர்க்க முடியாது என்று கேப்டன் விராட்கோலி பாராட்டி இருந்தார். இதனால் அவர் டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்புவார் என்று தெரிகிறது. வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின் ஆகியோரில் ஒருவருக்கு தான் இடம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. முதுகுவலியால் ஆபரேஷன் செய்துள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முழு உடல் தகுதியை எட்டிவிட்டால் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பார் என்பதில் சந்தேகமில்லை. சமீபத்தில் நியூசிலாந்து தொடருக்கான இந்திய ‘ஏ’ அணி தேர்வில் இருந்து விலகிய ஹர்திக் பாண்ட்யா உடல் தகுதியை எட்டாவிட்டால் சூர்யகுமார் மற்றும் ரஹானே ஆகிய இருவரில் ஒருவருக்கு இடம் கிடைக்கலாம். கேதர் ஜாதவுக்கு அணியில் இடம் கிடைப்பது சந்தேகம் தான் என்று சொல்லப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து