முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

23 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது பெரியகோவிலில் இன்று குடமுழுக்கு விழாக்கோலம் பூண்டது தஞ்சை மாநகரம்

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2020      ஆன்மிகம்
Image Unavailable

23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெறும் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக விழாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தஞ்சை மாநகரம் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.

வரலாற்று சிறப்பு வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி தஞ்சை பெரிய கோவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. முன்னதாக கடந்த சில நாட்களாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று இக்கோவிலில் குடமுழுக்கு கோலாகலமாக நடக்கிறது.

இதையொட்டி  தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி நேற்று முன்தினம் தஞ்சைக்கு சென்று அதிகாரிகளுடன் சென்று பெரிய கோவிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

நாளை (இன்று) நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

பாதுகாப்பு பணிக்கு திருச்சி மண்டலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து போலீசார் வந்துள்ளனர். திருச்சி மண்டல ஐ.ஜி. அமல்ராஜ் தலைமையில் டி.ஐ.ஜி.க்கள் லோகநாதன், பவானீஸ்வரி மற்றும் 10 போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 5500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி கும்பாபிஷேகத்தை காணும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  முன்னதாக கும்பாபிஷேகம் தொடர்பான பாதுகாப்பு பணி ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதற்கு அவர் தலைமை தாங்கி போலீசார் மத்தியில் பேசினார். இதில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜ், மற்றும் டி.ஐ.ஜி.க்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை நேற்று நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ், துணை ஆணையர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி உட்பட அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து