காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் குணமான பிறகு வாருங்கள்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி வேண்டுகோள்

திங்கட்கிழமை, 9 மார்ச் 2020      ஆன்மிகம்
Tirumala 2020 03 09

திருமலையில் பக்தர்கள் அதிக அளவில் வருவதால் காய்ச்சல், சளி, இருமல் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமான பிறகு ஏழுமலையான் தரிசனத்துக்கு வர வேண்டும் என தேவஸ்தான அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் காஞ்சிபுரம் என்ஜினீயர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா பரவலை தடுக்க ஆந்திர அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. திருப்பதியில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பக்தர்கள் வருவதால், அங்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக தேவஸ்தான உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருமலையில் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த காத்திருப்பு அறைகளில் உள்ள எல்.இ.டி. திரைகளில் குறும்படம் ஒன்றை தேவஸ்தானம் வெளியிட உள்ளது.பக்தர்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் வேலை செய்யும் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரசாரம் செய்யப்பட உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 2 மணிநேரத்துக்கு ஒருமுறை வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மருந்துகள் மூலம் சுத்தம் செய்யப்பட உள்ளது. பக்தர்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். மற்றவர்களிடம் 3 அடி தூரத்தில் இருந்தபடி பேச வேண்டும்.காய்ச்சல் இருப்பவர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்து சிகிச்சை அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் கொரோனா ரத்த மாதிரி பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழித்தடத்தில் மருத்துவக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. திருமலையில் பக்தர்கள் அதிக அளவில் வருவதால் காய்ச்சல், சளி, இருமல் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமான பின் ஏழுமலையான் தரிசனத்துக்கு வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து