முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று துவக்கம்

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஏப். - 8 - முன்னணி 10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் இன்று துவங்குகிறது. இதில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேற்று பயிற்சி மேற்கொண்டனர். 2008​ம் ஆண்டு ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உருவானது. ஒரு அணியில் பல நாட்டு வீரர்கள் இணைந்து ஆடிய இந்தப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 8 அணிகள் இதில் பங்கேற்றன. முதலாவது ஐ.பி.எல். போட்டியில் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

 2​வது போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், 3​வது போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றின.

இந்த ஆண்டு நடைபெறும் 4​வது ஐ.பி.எல். கிரிக் கெட் போட்டி இன்று (8​ந்தேதி) முதல் மே 28​ந்தேதி வரை நடக்கிறது. ஏற்கனவே விளையாடிய 8 அணிகளோடு, இந்த முறை புதிதாக புனே வாரியர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. போட்டி அமைப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டத்தில் விளையாடின. அதற்கு ஏற்றவாறு இந்த முறையும் 14 ஆட்டம் அமையும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. 10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகளும், மற்றொரு பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். அதே நேரத்தில் அடுத்த பிரிவில் உள்ள 5 அணிகளில் ஒரு அணியிடம் மட்டும் இரண்டு முறை விளையாட வேண்டும். மற்ற 4 அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த கட்டத் துக்கு செல்லும். முதலிடத்தை பிடித்த அணியும், 2​வது இடத்தை பிடித்த அணியும் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் தோற்கும் அணி, 3​வது மற்றும் 4​வது இடத்தை பிடித்த அணிகள் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் விளையாடும். இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு நுழையும். 

சென்னை, மும்பை அணிகளை தவிர மற்ற அணிகள் பெரும்பாலான வீரர்களை மாற்றம் செய் துள்ளது. கடந்த 3 ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் இந்த முறை வெவ்வேறு அணிகளில் விளையாடுகிறார்கள். அதிக ஏலத்தொகைக்கு போன காம்பீர் இந்த முறை கொல்கத்தா அணியில் விளையாடுகிறார். கடந்த 3 தொடரிலும் அவர் டெல்லி அணிக்கு விளையாடினார். அவர் ரூ.11.04 கோடிக்கு ஏலம் போனார். இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய யூசுப்பதான் தற்போது கொல்கத்தா அணியில் ஆடுகிறார். இதைப்போல பல வீரர்களும் வேறு அணியில் ஆடுகிறார்கள். கடந்த 3 ஐ.பி.எல். போட்டியிலும் கேப்டனாக இருந்தவர்களில் சென்னை (டோனி), மும்பை (தென்டுல்கர்), ராஜஸ்தான் (வார்னே) ஆகிய அணிகளில் மாற்றம் இல்லை. மற்ற அணிகளில் கேப்டன்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 10 அணிகள் பங்கேற்பதால் இந்தப்போட்டி மேலும் விறு விறுப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

4​வது ஐ.பி.எல். போட்டியின் துவக்க விழா சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று  மாலை 6 மணிக்கு முதல் இரவு 7.20 மணி வரை நடக்கிறது. தொடக்க விழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சி, சினிமா பிரபலங்களின் நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இதனைத்தொடர்ந்து துவக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்