முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எளிய இலக்கை கடினமாக்கி மும்பை இந்தியன்ஸ் வெற்றி

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, ஏப்.21 - ஐ.பி.எல். போட்டியில் எளிமையான இலக்கை சாதாரணமாக கையாண்ட மும்பை இந்தியன்ஸ் இறுதியில் கடைசி பந்தில் புனே அணியை வென்றது.ஐ.பி.எல். போட்டி தொடரின் 21-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், யுவராஜ்சிங் தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. இரண்டு அணிகளுமே சமபலம் கொண்டவையாக கணிக்கப்பட்டு இருந்ததால் ரசிகர்கள் இடையே கடும் எதிர்பார்ப்பு நிலவியது. டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் கேப்டன் யுவராஜ் சிங் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அந்த அணியின் துவக்க வீரர்கள் ஜெஸ்ஸி ரைடர் மற்றும் பைனே ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. புனே அணி 16 ரன்களை எடுத்திருந்தபோது அதிரடி வீரர் ஜெஸ்ஸி ரைடர் 12 ரன்கள் எடுத்த நிலையில் அஹமதின் பந்துவீச்சில் சச்சினிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து மன்ஹாஸ் களமிறங்கினார். மன்ஹாஸ் ரன் எதுவும் எடுக்காத நிலையில் அஹமதின் அதே ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் ஒரே ஓவரில் புனே அணி இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அடுத்ததாக ராபின் உத்தப்பா களமிறங்கினார். அடுத்த ஓவரை முனாப் பட்டேல் வீசினார். இவரது பந்தில் பீட் ஆன பைனே கிளீன் போல்டு முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது புனே அணி 3 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் களமிறங்கிய அணியின் கேப்டன் யுவராஜ் சரிவை தடுத்து நிறுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரும் முனாப் பட்டேலின் அதே ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட் கீப்பர் ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 4 வது மற்றும் 5 வது ஓவர்களில் புனே அணி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் மிஸ்ரா, உத்தப்பாவுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 8.3 ஓவர்களில் 52 ஆக இருந்தபோது 12 ரன்களை எடுத்திருந்த மிஸ்ரா, மொர்டாசாவின் பந்தில் சர்மா கேட்ச் பிடிக்க அவுட்டானார். அடுத்து முரளி கார்த்திக், உத்தப்பா ஜோடி சேர்ந்து ரன் எண்ணிக்கையை நகர்த்திக்கொண்டு சென்றது. 87 ரன்களை புனே அணி தொட்டபோது, 11 ரன்களை எடுத்திருந்த கார்த்திக், மலிங்காவின் பந்தில் சைமண்ட்சால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அணி 98 ரன்களை அடைந்தபோது அதுவரை தாக்குப்பிடித்து 45 ரன்களை அடித்த உத்தப்பா, மொர்டாசாவின் பந்தில் பொல்லார்டு பிடித்த ஒரு அற்புதமான டைவிங் கேட்சால் அவுட்டாக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் புனே அணியின் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்ததால் 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களை மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் முனாப் பட்டேல் மிக சிக்கனமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும், அஹமது, மொர்டாசா, மலிங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பிரான்ங்ளின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ். துவக்க ஆட்டக்காரர்களாக பிரான்க்ளின் மற்றும் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் பிரான்க்ளின் 6 ரன்களே எடுத்த நிலையில் வாஹ் பந்தில் மன்ஹாசால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதையடுத்து அம்பதி ராயுடு துவக்க வீரர் சச்சினுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் மிக நிதானமாக ரன்களை சேர்த்தனர். இவர்களின் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிக்கு அருகாமையில் கொண்டுசென்றது. இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 83 ஐ எட்டியபோது 35 ரன்களை எடுத்திருந்த சச்சின், சர்மாவின் பந்தில் தாமசால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்ததாக ரோகித் சர்மா களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 89 க்கு சென்றபோது அம்பதி ராயுடுவும் 37 ரன்கள் எடுத்த நிலையில் தாமசின் பந்தில் சர்மாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதையடுத்து அதிரடி வீரர் சைமண்ட்ஸ், சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இவர்களும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இதனால் வெற்றி இலக்கை நெருங்கியது மும்பை இந்தியன்ஸ். இறுதி ஓவர் பரபரப்பான நிலையை எட்டியது. அந்த ஓவரை முரளி கார்த்திக் வீசினார். இந்த ஓவரில் கடைசி 2 பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது ஒரு ரன் எடுக்க மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஓடினர். கார்த்திக் பந்தை சரியாக சேகரிக்காமல் விட்டதால் அந்த ரன் எடுக்கப்பட்டது. ரன் அவுட் ஆகாமல் சைமண்ட்ஸ் தப்பினார்.  இதனால் மும்பை இந்தியன்ஸ் 118 ரன்களை எடுத்தது. கடைசி பந்தை சந்தித்த ரோகித் சர்மா அந்த பந்தை சிக்ஸருக்கு தூக்கினார். இதனால் கடைசி பந்தில் மும்பை இந்தியன்ஸ், புனே வாரியர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மும்பை தரப்பில் சைமண்ட்ஸ் ஆட்டமிழக்காமல் 16 ரன்களையும், சர்மா 20 ரன்களையும் பெற்றனர். புனே தரப்பில் தாமஸ், வாஹ், சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை வீரர் முனாப் பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் 4 போட்டிகளில் 3 ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்