முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியா கலவரத்தில் நெல்லை தொழிலாளி பலி

புதன்கிழமை, 23 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை பிப்-23  - நெல்லை மாவட்டத்திலிருந்து லிபியா நாட்டிற்கு வேலைக்கு சென்ற தொழிலாளி ஒருவர் அங்கு நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தில் உயிரிழந்ததாகவும், மேலும் 25க்கும் மேற்பட்டோர் அங்குள்ள மசூதிக்குள் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அவர்களை பத்திரமாக மீட்டு சொந்த நாட்டுக்கு அழைத்துவர இந்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேணடுமென்றும் அவரது உறவினர்கள் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

             நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா தலைவன்கோட்டை மற்றும் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளிகள் லிபியா நாட்டில் ஹோண்டாய் கம்பெனியின் மூலம் அந்நாட்டில் டவர்கள் மற்றும் பவர் கிரிடுகள் அமைக்கும் வேலைக்காக சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அங்கு திட்ட மேலாளராக பணிபுரிந்து வரும் சங்கரன்கோவில் தாலுகா பெருங்கோட்டூர் கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் ஏற்பாட்டில் அங்கு சென்று வேலைப்பார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அங்கு இவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த வீட்டில் தங்கியிருந்து வேலைப்பார்த்து வந்தனர். இந்நிலையில்  சிலதினங்களாக லிபியா நாட்டில் அரசுக்கெதிராக உள்நாட்டு கலவரத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு தகவல் தொடர்பு உள்ளிட்ட எல்லாம் முடக்கப்பட்டுள்ளன. எனவே நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளிகள் எங்கும் செல்ல முடியாமல் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டிலேயே தங்கியிருந்துள்ளனர். இதற்கிடையே நெல்லை மாவட்ட தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பகுதிகளுக்கு வந்த கலவரக்காரர்கள் திடிரென அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் வெடிகுண்டுகள் வீசப்போவதாகவும் அங்கு தங்கியிருக்கும் அனைவரும் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு தங்கியிருந்த 25க்கும் மேற்பட்ட நெல்லை மாவட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர். அப்போது அங்கு வெடித்த கலவரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டம் தலைவன் கோட்டையை சேர்ந்த சண்முக தேவர் மகன் முருகையா(40), ஆலங்குளம் அருகேயுள்ள நாகல்குளத்தை சேர்ந்த அசோக்குமார்(24), களப்பாகுளத்தை சேர்ந்த முத்துகுமார் ஆகியோர் படுகாயமடைந்ததாக தெரிகிறது. மற்றவர்கள் அப்பகுதியிலுள்ள மசூதிக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதற்கிடையே படுகாயமடைந்த முருகையா உயிரிழந்து விட்டதாகவும், மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் மசூதிக்குள் தஞ்சம் புகுந்துள்ள தொழிலாளர்கள் தங்கள் உறவினர்களுக்கு செல்போன்கள் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மசூதிக்குள் தஞ்சம் புகுந்தவர்கள் கடந்த சிலதினங்களாக சாப்பாடு மற்றும் குடிநீர் எதுவும் இல்லாமல் கழிப்பறை நீரை குடித்து உயிர்வாழ்ந்து வருவதாகவும் தங்களை பத்திரமாக மீட்டு செல்ல அரசை வலியுறுத்துமாறும் உறவினர்களுக்குத்தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அவர்களிடமிருந்து நேற்று முன்தினம் முதல் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டதால் அவர்கள் யாரையும் தொடர்புகொள்ளவில்லையென தெரிகிறது. இதனால் அவர்களது தற்போதைய நிலை பற்றி எதுவும் தெரியவில்லை. எனவே மசூதிக்குள் தஞ்சம் அடைந்திருப்பவர்களை பத்திரமாக மீட்டு தாயகத்திற்கு அனுப்பி வைக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்களது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று நெல்லை கலெக்டர் ஜெயராமனை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அவரும் அவர்களை மீட்க தக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

                     கலவரத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் முருகையாவிற்கு வெள்ளத்தாய் என்ற மனைவியும், கலையரசி என்ற மகளும் கோபாலகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.மகள் கலையரசிக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. மகன் கோபால கிருஷ்ணன் தற்போது 9ம் வகுப்பு படித்துவருகிறார். கணவர் இறந்த துக்கம் தாளாமல் கண்ணீர் மல்க கலெக்டரிம் தனது கணவரின் சடலத்தை மீட்டுத்தருமாறு மனுக்கொடுத்த சம்பவம் அனைவருக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியது. 

              லிபியாவிற்கு வேலைக்கு சென்றவர்கள் அனைவருமே சமீபத்தில்தான் அங்கு சென்றுள்ளதாக தெரிகிறது. அதுவும் கடன்வாங்கித்தான் வெளிநாடு சென்றுள்ளனர். எனவே அவர்களை மீட்டு தரவேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். மேலும் உயிரிழந்த, காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணமும் வழங்கவேண்டுமன வலியுறுத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்