முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக மாநிலத்தில் கவர்னரை டிஸ்மிஸ் செய்யக்கோரி பா.ஜ.க.வினர் போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,மே.- 18 - கர்நாடக மாநிலத்தில் தற்போது கவர்னராக இருக்கும் பரத்வாஜை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரி ஆளும் பாரதீய ஜனதா கட்சியினர் மாநிலம் முழுவதும் கண்டன பேரணிகளையும், எதிர்ப்பு போராட்டங்களையும் நடத்தினர். அதே நேரம் எடியூரப்பா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரி காங்கிரசாரும் பதிலுக்கு போராட்டம் நடத்தினார்கள். கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சியை அமுலுக்கு கொண்டு வர வேண்டும் என்று அம்மாநில கவர்னர் பரத்வாஜ் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு பாரதீய ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரி கர்நாடகத்தில் நேற்று பா.ஜ.க. சார்பில் போராட்டங்கள் வெடித்தன. அப்போது கவர்னர் பரத்வாஜின் கொடும்பாவிகளை பா.ஜ.கவினர் எரித்தனர்.
மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் அவர்கள் போராட்டம் நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பா.ஜ.க. சார்பில் மைசூர், பிஜப்பூர், பெல்காம் உள்ளிட்ட பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
பெங்களூரில் இதே காவி கட்சியினர் டவுன்ஹால் அருகே கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள். இதே போல் காங்கிரசாரும் பதிலுக்கு பதில் போராட்டம் நடத்தினார்கள். எடியூரப்பா அரசை தூக்கியெறிய வேண்டும் என்று முழங்கிய அவர்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி போராட்டம் நடத்தினார்கள். பெங்களூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் இந்த போராட்டம் நடந்தது. இப்படி இரு தரப்பினரும் போராட்டம் நடத்தியதால் கர்நாடகத்தில் நேற்று பெரும் பரபரப்பு காணப்பட்டது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்