முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூடப்பட்ட ஓடுபாதையில் தரையிறங்கிய விமானம்

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, ஜுன் - 28 - கொல்கத்தா விமான நிலையத்தில் மூடப்பட்டிருந்த ஒரு ஓடுபாதையில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அனைத்து பயணிகளும் உயிர்தப்பினர்.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு ஏர் பஸ் விமானம் ஒன்று 141 பயணிகளுடன் வந்தது. இந்த விமானத்தை இரண்டாவது ஓடுபாதையில் தரயிறக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கூறினர். ஆனால் அந்த விமானம் இரண்டாவது ஓடுபாதையில் தரையிறங்காமல் மூடப்பட்டு கிடந்த முதலாவது ஓடுபாதையில் தரையிறங்கியது. அந்த ஓடுபாதையில் 45 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த தொழிலாளர்களில் ஒருவர் தனக்கு நேர் மேலே ஒரு விமானம் தாழ்வாக பறந்துவருவதை பார்த்து ஏதோ நடக்கப்போகிறது என்பதை உணர்ந்து தன்னுடன் வேலை பார்ப்பவர்கள் அனைவரையும் உஷார் படுத்தினார். இதையடுத்து அந்த பகுதியில் இருந்த இரண்டு கனரக வாகனங்களும், 45 தொழிலாளர்களும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விலகிச் சென்றனர். இந்த விமானம் தரையிறங்கியபோது விமானி அவசர பிரேக் போட்டிருக்கிறார். ஆனாலும்கூட அந்த விமானம் உடனே நிற்காமல் நீண்டதூரம் ஓடிச் சென்றே நின்றது. முதலாவது ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்கிவிட்ட பிறகுதான் விமானி தனது தவறை உணர்ந்தார். பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகி இருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும். எப்படியோ அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது. இந்த தகவல்களை கொல்கத்தா விமான நிலைய கட்டுப்பாட்டு  அறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்