முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச லேப்-டாப் திட்டம்: 22 நிறுவனங்கள் போட்டி

புதன்கிழமை, 20 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.20 -​தமிழகத்தில் உள்ள 9.12 லட்சம் மாணவர்களுக்கு லேப்​டாப் தயாரித்து வழங்க 22 நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இதில், வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகமாக பங்கேற்றுள்ளன. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி, பிளஸ்​1, பிளஸ்​2 மாணவர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும் இலவச லேப்​டாப் வழங்கப்படும் என்று முதல்​அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

முதற்கட்டமாக 2011​2012​ம் கல்வி ஆண்டில் 9.12 லட்சம் மாணவ​மாணவிகளுக்கு, செப்டம்பர் 15​ந் தேதி முதல் லேப்​டாப் வழங்கப்படுகிறது. லேப்​டாப் கொள்முதல் செய்வதற்காக, தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து, ஜூன் 4​ந் தேதி முதல் டெண்டர் கோரப்பட்டது. ஏராளமான நிறுவனங்கள் போட்டிபோட்டு விண்ணப்பித்தன.

டெண்டர் ஜூலை 11​ந் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மேலும் சில நிறுவனங்கள் டெண்டரில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்து கால அவகாசம் கேட்டதால், ஜூலை 18​ந் தேதிக்கு டெண்டர் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது.

அதன்படி, நேற்று மாலை 4 மணியுடன் டெண்டர் விண்ணப்பிக்கும் நேரம் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, சென்னை நந்தனம் எல்காட் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த டெண்டர் பெட்டி சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.

அதன்பின்னர், மாலை 4.30 மணிக்கு, எல்காட் நிர்வாக இயக்குனர் அதுல் ஆனந்த் மற்றும் லேப்​டாப் நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில் டெண்டர் பெட்டி திறக்கப்பட்டது.

 விப்ரோ, ஐ.பி.எம்., எச்.சி.எல்., எச்.பி., சாம்சங், லினோவா, தோசிபா, ஆசர் உள்பட 22 நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கேற்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டியது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நிறுவனமும், தாங்கள் தயாரிக்கும் பொருட்களின் தரம், தயாரிக்கும் இடம், தொழிலாளர் எண்ணிக்கை போன்ற தயாரிப்பு சம்பந்தமான விளக்கங்களை ஒரு உறையிலும், மற்றொரு உரையில் எவ்வளவு விலையில் தயாரித்துக் கொடுக்க முடியும் என்பதையும் கூறியிருந்தன.

தொழில்நுட்ப உற்பத்தி சார்ந்த உறைகள் மட்டும் நேற்று பிரிக்கப்பட்டன. இதில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் விரைவில் சென்று ஆராய உள்ளனர். அவர்கள் தரும் அறிக்கையை தொடர்ந்து, மற்றொரு உறை பிரிக்கப்படும்.

அதன் பின்னர் முதல்​அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் யாருக்கு பணி வழங்குவது என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது. லேப்​டாப் தயாரித்து வழங்கும் பணிகள் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படலாம் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்