முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணியில் இருந்து விலகத்தயார் மம்தா பானர்ஜி திடீர்ஆவேசம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

கொல்கத்தா, ஜன.- 8 - மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலக தங்களது கட்சி தயாராக இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி திடீரென ஆவேசமாக கூறியுள்ளார். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய அங்கம் வகித்துவருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்து போட்டியிட்டன. இந்த தேர்தலில் ஆளும் இடதுசாரிகள் தூக்கி எறியப்பட்டனர். மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். இவர் பதவி ஏற்றது முதற்கொண்டே காங்கிரஸ் கட்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உறவில் லேசான விரிசல் இருந்து வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தனது எதிர்ப்பை தெரிவித்தது. இதேபோல பெட்ரோல் விலை உயர்வுக்கும் அக்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆளும் கூட்டணியில் இருந்துகொண்டே திரிணாமுல் காங்கிரஸ் இவ்வாறு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்ததன் காரணமாக காங்கிரஸ் -திரிணாமுல் காங்கிரஸ் உறவில் ஏற்பட்டிருந்த விரிசல் மேலும் விரிவடைந்தது.  இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தாங்களது கட்சி விலகிக்கொள்ள எப்போதும் தயாராக இருப்பதாக மம்தா பானர்ஜி திடீரென அறிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  கொல்கத்தாவில் அரசு தலைமை செயலகத்தில் மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பொய் பிரச்சாரத்தை செய்துவருகிறது என்றார். கடந்த 5 ம் தேதி ராய்குனி பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தங்களது கட்சிக்கு எதிராக காங்கிரசார் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் கூறினார். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, அடிக்கடி செய்யப்படும்  பெட்ரோல் விலை உயர்வு, மாநில அரசு நிர்வாகத்தில் மத்திய அரசு தலையீடு ஆகியவற்றுக்கு  தங்களது கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்ததன் காரணமாகவே தங்களது கட்சிக்கு எதிராக இவர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். லோக்பால் மசோதாவில் லோக் அயுக்தா வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ளது. தங்களது வார்த்தைகளுக்கு காங்கிரஸ் கட்சி செவி சாய்ப்பதில்லை. லோக்பால் மசோதா மீது ராஜ்யசபையில் ஓட்டெடுப்பும் நடத்தப்படவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது தங்களது கட்சிக்கு எதிராக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்பது தெளிவாகிறது என்றும் அவர் கூறினார். 

இடது கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்துகொள்ளலாம் என்று காங்கிரஸ் நினைத்தால் அவ்வாறே சேர்ந்துகொள்ளலாம். எங்களது கூட்டு வேண்டாம் என்றாலும் அவர்கள் இஷ்டப்படியே செய்துகொள்ளலாம். இடது கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து செயல்பட ஆசைப்பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அவர்களுக்கு தேவையில்லை. எனவே தங்களது கட்சி கூட்டணியில் இருந்து விலகி தனித்து செயல்படவும் தயாராக உள்ளது என்றும் மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்