முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை தமிழகத்தில் படப்பிடிப்புகள் ரத்து

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜன.22 - நாளை தமிழ் படத்தின் படப்பிடிப்புகள் ரத்து செய்ய தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் சங்கமும், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமும் கலந்து பேசி திரைப்படத் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய விகிதங்களையும், பொது விதிகளையும் முடிவு செய்வது வழக்கம். இதற்கிடையில் எங்களது சங்கத்தின் தேர்தல் கடந்த 09.10.11 அன்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று எங்களது புதிய நிர்வாகம் பதவியேற்ற பிண்பு நடத்தப்பட்ட அடுத்த 3-ஆண்டுகளுக்கான புதிய ஊதிய விகிதங்கள் குறித்து பேச்சு வார்த்தை முடிவடையாத நிலையில் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தினர் தாங்களாகவே முறையற்ற ஒரு புதிய சம்பள விகிதத்தை நிர்ணயம் செய்து கொண்டதோடு இனி இந்த புதிய சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு தான் திரைப்படத் தொழிலாளர்கள் வேலை செய்வார்கள் என்று தன்னிச்சையாக 20.01.2012 அன்று அறிவித்துள்ளனர்.

இது தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமும் கலந்து பேசி ஒப்பந்தம் செய்யப்படும் அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களின் ஜனநாயகப் போக்கிற்கு சவால் விடுவது போல திரைப்பத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தன்னிச்சையான செயல்பாடு அமைந்துள்ளது.

ஆகவே தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்களின் இந்த எதேச்சிகரமான முடிவு குறித்து தயாரிப்பாளர்களோடு கலந்து பேசவும், தொழிலாளர்களுக்கு எந்த விகிதத்தில் சம்பள உயர்வைக் கொடுத்து படப்பிடிப்பைத் தொடருவது என்று முடிவெடுக்கவும் தமிழத் திரைப்படத் தயாரிப்பாளர்களின் அவசர பொதுக்குழு கூட்டம் 23.01.2012 (திங்கட்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை திரையரங்கில் நடைபெறவிருக்கிறது.

இது எல்லா திரைப்படத் தயாரிப்பாளர்களும் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய முக்கியமான கூட்டம் என்பதால் இக்கூட்டத்தில் எல்லாத் திரைப்படத் தயாரிப்பாளர்களும் கலந்து கொள்வதற்கு வசதியாக 23.01.2012 (திங்கட்கிழமை) அன்று முழு நாளும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. அன்று எந்தத் தமிழ்ப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெறாது. ஆகவே தயாரிப்பாளர்களின் ஒற்றுமை காக்க அனைத்து தயாரிப்பாளர்களும் இந்த மிக முக்கிய கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்