முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதியில் மழைக்கு வாய்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : வெப்பசலனத்தின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த பல நாட்களாக தமிழகத்தில் குறிப்பாக உள்மாவட்டங்கள், மேற்குமாவட்டங்கள் மற்றும் மதுரை, தேனி, பெரியகுளம், கொடைக்கானல் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 5 செ.மி. மழை பெய்துள்ளது.  மேலும் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதனையொட்டி கடலூர் துறைமுகத்தில் நம்பர் 1 புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக கனத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் இன்றோ அல்லது நாளையோ தென்மேற்கு பருவமழை தொடங்கலாம் என்று தெரிகிறது. இதன் முன்னோடியாக கேரளத்தில் கடலோர பகுதிகளான விழிஞ்ஞம், திருவனந்தபுரம் அருகே இருக்கும் கோவளம், இடுக்கி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. கொச்சி,எர்ணாகுளம் ஆகிய பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் நாளை முதல் கனமழை பெய்யலாம்.  

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டால் கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், வால்பாறை, நீலகரி மாவட்டத்தில் குன்னூர், ஊட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கிவிடும். கர்நாடக மாநிலத்தில் குடகு பகுதியிலும் கனமழை பெய்யும். இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். அதோடுமட்டுமல்லாது மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியிலும் சாரல் மழை பெய்யும். இதனையொட்டி தமிழகத்தில் வறட்சிநிலை மாறும் வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையில் கேரள கடல்பகுதியில் கொந்தளிப்பாக இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 2 சதவீதம் கூடுதலாக பெய்யலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து