முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் ரூ.28.72 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடிக்கல் நாட்டினார்

சனிக்கிழமை, 21 அக்டோபர் 2017      நீலகிரி
Image Unavailable

 

ஊட்டியில் ரூ.28.72 கோடி செலவில் எஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடிக்கல் நாட்டினார்.

ஊட்டி காக்காதோப்பு பகுதியில் ரூ.28.72 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. தாவரவியல் பூங்கா சாலையில் அமைந்துள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டி பேசியதாவது_

 நீதித்துறையில் நீதிமன்றங்கள் மற்றும் வழக்கறிஞர்களின் பங்கு சமமானது. சமானிய மக்களின் நீதித்துறை தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். காலத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும். ஆங்கிலேயர் காலத்தில் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளே மையமாக இருந்தனர். இன்றைய காலகட்டத்தில் சிறந்த தீர்ப்புகள் வழங்க நீதிபதிகளுடன் வழக்கறிஞர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும். காலதாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். அதேபோல் அவசரகதியில் வழங்கப்படும் நீதியும் புதைக்கப்பட்ட நீதிக்கு சமமாகும். துரிதமாக செயல்படுவதால் தீர்ப்பு சிறப்பாக அமையும். எனவே வழக்கறிஞர்கள் துரிதமாக செயல்பட வேண்டும். துரிதமாக செயல்படும் வழக்கறிஞர்கள் மக்களின் நம்பிக்கையை பெறுவர். அத்துடன் அவர்களுக்கு நிறைய வழக்குகளும் கிடைக்கும். சிறப்பான தீர்ப்புகள் வழங்க நீதிபதிகள் பாரபட்சமாக இல்லாமல் கடுமையாக பணியாற்ற வேண்டும். வழக்கறிஞர்கள் சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க பாடுபட வேண்டும். மக்கள் நீதிமன்றங்கள் மற்றும் சமரச தீர்வு மையங்கள் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகள் குறைந்து வருகின்றன. உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி வரும் 31.03.2018க்குள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

 விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், நீலகிரி மாவட்ட நிர்வாக நீதிபதியுமான டி.கிருஷ்ணகுமார் பேசுகையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பொறுப்பேற்ற கடந்த 6 மாத காலத்தில் தம்ழகம் முழுவதும் 20 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் பேசும்போது நீலகிரி மாவட்டத்தில் நிறைய தோட்டத்தொழிலாளர்கள் உள்ளதால் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்திற்கு ஒரு லேபர் கோர்ட் ஏற்படுத்தித்தர வேண்டுமென கோரிக்கை வைத்தார். விழாவில் சட்டத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, மாவட்ட எஸ்.பிமுரளி ரம்பா, நீலகிரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தினேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் என்.கிருஷ்ணகுமார் திட்டத்தை பற்றி விளக்கினார்.

கலந்து கொண்டோர்

முன்னதாக நீலகிரி மாவட்ட தலைமை நீதிபதி பி.வடமலை வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதி என்.முரளிதரன் நன்றி கூறினார். விழாவில் ராஜ்யசபா உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், சட்டமன்ற உறுப்பினர்கள் சாந்தி ராமு, கணேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ஸ்ரீனிவாச ரெட்டி, பல்வேறு நீதிமன்றங்களின் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் அனந்தகிருஷ்ணன், நஞ்சுண்டன், சங்கர், நீலகிரி வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சந்தோஷ்குமார், பொருளாளர் நந்தகுமார், துணைத்தலைவர் ரேவதி, இணை செயலாளர் சுரேஷ்குமார், மற்றும் திரளான வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து