முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனை, குடிநீர், தெருவிளக்குகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கமணி உத்தரவு

சனிக்கிழமை, 6 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தலைமைச் செயலகம், மருத்துவமனை, நீதிமன்றம், குடிநீர், தெருவிளக்கு, டெலிபோன் டவர் போன்றவற்றிற்கு தடையில்லா மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கலந்தாய்வுக் கூட்டம்...தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மழை காலத்தில் மின்விபத்துக்களை தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சீரான மின் விநியோகம் செய்தல் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் மின்வாரிய உயர்அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் விக்ரம் கபூர் பருவமழை முன்னெச்சரிக்கையாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து அமைச்சர் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக ஆலோசனை மேற்கொண்டார்.

அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்...தமிழகத்தில் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் போர்கால அடிப்படையில் பழுது மற்றும் சேதங்களை சரிசெய்து மின்விநியோகிக்கும் பணியினை சிறப்பாக செய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில்அனைத்து அலுவலர்களும் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபடுவதோடு தயார்நிலையில் இருக்கவேண்டும். வடகிழக்கு பருவமழை காலங்களில் முதன்மை பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன. மீதி உள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளையும் ஒரிருநாட்களில் முடித்திட வேண்டும். அனைத்து அத்தியாவசிய நிறுவனங்களுக்கும் மின் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மின்வாரிய அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இனைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

1) சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்கள், அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் மற்றும் நீரில் மூழ்கும் புதைவடங்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தமிழ்நாடு மின்சார வாரிய பிரிவு அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துமாறு மின்துறை துறை அமைச்சர் தங்கமணி அறிவுரை வழங்கினார். இவைதவிர, பொதுமக்களுக்கு மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு ஒலி நாடாவை மக்களிடையே விளம்பரம் படுத்த வேண்டும்.
2) துணை மின்நிலையங்களில் மழைநீர் புகாமல் இருக்கவும் அப்படி மழைநீர் தேங்கினால் அதை வெளியேற்றிட மின் மோட்டர்கள் மற்றும் பம்புசெட்டுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
3) மின் வழிதடங்கள், மின் மாற்றிகள் அனைத்தையும் அவ்வப்பொழுது ஆய்வு செய்து தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
4) பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்பகிர்மானப் பெட்டிகள் உடனுக்குடன் மாற்றப்பட வேண்டும்.
5) மின்கம்பிகள் தொங்கிய நிலையில் இருந்தால் அவற்றை உடனே சரிசெய்ய வேண்டும்.
6) மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ள நேரங்களில் மாவட்ட நிர்வாகம் நடத்தும் ஆலோசனை கூட்டங்களில் மேற்பார்வை பொறியாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு அறிவுரைக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
7) மின்பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
8) தலைமைச் செயலகம், மருத்துவமனை, நீதிமன்றம், குடிநீர், தெருவிளக்கு, டெலிபோன் டவர் போன்றவற்றிற்கு தடையில்லா மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும். இருப்பினும் இவ்வலுவலகங்கள் மின்சாரத்திற்கு மாற்றாக ஜெனரோட்டர் வசதிகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கும் தகவல்களை உடனுக்குடன் தொடர்புடைய அலுவலர்களுக்கு தெரிவித்து கோரிக்கை மற்றும் பழுதுகளை சரிசெய்து சீரான மின்விநியோகம் வழங்கிட அனைத்து அலுவலர்களும் சிறப்பாக ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். இவ்வாறு கலந்தாய்வுக் கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது.
இக் கூட்டத்தில் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் விக்ரம் கபூர்., இணை மேலாண்மை இயக்குநர். பி.என். ஸ்ரீதர்., நிர்வாக இயக்குநர் சி. சண்முகம் மற்றும் மின்வாரிய இயக்குநர்கள் ஹெலன்,. செந்தில் வேலன், . மு. சந்திரசேகர், எஸ். கீதா,. ஆக்ஸிலியம் ஜெயமேரி, மகேஸ்வரிபாய்,. சுந்தரவதனம் மற்றும் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து