முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      தமிழகம்
vaigai dam-2023-05-04

Source: provided

தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு முறைப்பாசன அடிப்படையில் கால்வாய் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 6-ம் தேதி நிறுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து 60 அடிக்கு கீழ் குறைந்தது. மழை நின்று விட்டதால் அணைக்கு நீர்வரத்தும் முற்றிலும் நின்றது. 

நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 59.19 அடியாக இருந்தது. நீர் இருப்பு 3454 மி.கன அடியாக உள்ளது. இந்த நிலையில் மதுரையில் நடைபெறும் உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். 

இந்த ஆண்டு மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்படும் என ஏற்கனவே அதிகாரிகள் அறிவித்திருந்தனர். 

இந்த நிலையில் நேற்று நீர்பாசனத்துறை அதிகாரிகள் வைகை அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டனர். நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் வருகிற 22-ம் தேதி வரை 4 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து