முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024      தமிழகம்
Pramalatha 2023-07-24

சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும். அதுவரை பொது விநியோகத்திற்கு தமிழக அரசு இந்த அரிசியை அனுமதிக்க கூடாது என்று தே.மு.தி.க. பொது செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். 

இது குறித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரேசனில் செறிவூட்டப்பட்ட அரிசியை எப்படி விநியோகம் செய்கிறீர்கள் என மத்திய அரசிடம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. அதற்கு தலசீமியா, அனீமியாவால் பாதித்தவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும், அது குறித்த விளம்பரங்கள் ரேசன் கடைகளில் வைத்துள்ளதாகவும் மத்திய அரசு கூறி உள்ளது. 

அப்போது அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்டறிவீர்கள் என கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. அதுவும் ரேசன் கடை என்றாலே ஏழை மக்கள் அதிகம் அரிசி வாங்கி பயன்படுத்துவது வழக்கம். அதனால் யார் இந்த அரிசியை பயன்படுத்தலாம். பயன்படுத்தக் கூடாது என்பதில் அரசு கவனமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய கோர்ட்டுக்கு தே.மு.தி.க. சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

எனவே தரம் பிரித்து இந்த அரிசியை யார் உண்ண வேண்டும் என உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும். அதுவரை பொது விநியோகத்திற்கு தமிழக அரசு இந்த அரிசியை அனுமதிக்க கூடாது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து