முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையில் மக்களவையில் வக்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: ஆதரவு 288 - எதிர்ப்பு 232 பேர் வாக்களிப்பு

வியாழக்கிழமை, 3 ஏப்ரல் 2025      இந்தியா
Parlimanet 2024-06-30

புதுடெல்லி, மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த மசோதா நிறைவேறியது. 

திருத்தப்பட்ட வக்பு மசோதாவில் மத்திய வக்பு வாரியம் மற்றும் இதர வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத இரண்டு உறுப்பினர்கள் கட்டாயம் இடம்பெறுவது இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விதி சர்ச்சைக்குரிய விஷயமாக எதிர்க்கட்சி தரப்பில் பார்க்கப்படுகிறது. இதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இது அரசியலமைப்புக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. மேலும், இந்த மசோதாவை ஆராய பாராளுமன்ற கூட்டுக் குழுவில் அங்கம் வகித்த தங்களது பரிந்துரைகள் கருத்தில் கொள்ளவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாதம் செய்தனர். இதன் மூலம் சிறுபான்மையின மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்தது.

வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். எனினும், அமைச்சர் கிரண் ரிஜிஜூ மசோதா மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: வக்பு திருத்த மசோதாவுக்காக அமைக்கப்பட்ட பாராளுமன்ற கூட்டுக் குழுவுக்கு, 92.27 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் நேரடியாகவும் இணையவழியிலும் குவிந்தன. அவை ஒவ்வொன்றையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வக்பு வாரியங்கள் மட்டுமல்லாது 284 குழுக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தன். அதன் அடிப்படையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மசோதா ‘உமீது’ மசோதா என பெயர் மாற்றப்படும். அனைத்து மத அமைப்புகளையும் அவற்றின் சுயாட்சியையும் அரசு மதிக்கிறது. அவர்களுடைய மத விவகாரங்களில் தலையிட அரசு முயற்சிக்கவில்லை. இது முற்றிலும் சொத்துகளை கண்காணிப்பது மற்றும் நிர்வாகம் செய்வது பற்றிய விஷயம் ஆகும். குறிப்பாக, இப்போது உள்ள சட்டத்தின் 40-வது பிரிவின்படி எந்த ஒரு நிலத்தையும் வக்பு சொத்து என வக்பு வாரியத்தால் அறிவிக்க முடியும். இந்த கடுமையான பிரிவு நீக்கப்படுகிறது. அதேநேரம் மசூதி நிர்வாகத்தில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு திருத்த மசோதாவுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் பேசும்போது, “அரசியல் சாசனத்தை நீர்த்து போகச் செய்வதும், சிறுபான்மையினரின் வாக்குரிமையை பறித்து அவர்களை இழிவுபடுத்துவதும், இந்திய சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதும்தான் இந்த மசோதாவின் நோக்கம். பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வின் போது, எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஆலோசனைகள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டன” என்றார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “வக்பு சட்டத்தின்படி, கோயில்கள், பிற மதத்தினர், அரசுகள் ஆகியோருக்கு சொந்தமான நிலங்கள் வக்பு சொத்துகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. உதாரணமாக டெல்லியின் லுட்யன்ஸ் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான ஒரு சொத்து வக்பு வசமானது. தமிழ்நாட்டில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு சொந்தமான சொத்தும் வக்பு சொத்து என அறிவிக்கப்பட்டது. இவற்றுக்கெல்லாம் முடிவு கட்டுவதற்குதான் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். பின்னர் விடிய விடிய நடந்த விவாதத்துக்கு பிறகு மக்களவையில் வக்பு திருத்த  மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago
View all comments

வாசகர் கருத்து