முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - ​பாக்., போட்டி: மைதானத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, டிச.30 -​இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் 1​1 என சமன் ஆனது. இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் மோத உள்ளன. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று  (டிசம்பர் 30) நடக்கிறது. இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.

இப்போட்டிக்கு அச்சுறுத்தல் இருப்பதால் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மைதானத்தின் கேலரிகளுக்கு ரசிகர்கள் செல்ல அனுமதிக்கப்படும் 18 வழிகளிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிரமாக சோதனை செய்யப்படும். இதுதவிர ரசிகர்களை கண்காணிக்க மைதானத்தின் பல்வேறு பகுதிகளில் 218 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. 

ரசிகர்கள் வெளியில் இருந்து பேனர்கள், சிகரெட்டுகள், லைட்டர்கள் உள்ளிட்ட எந்தப் பொருட்களையும் எடுத்து வர அனுமதி இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து மாற்றம்:

போக்குவரத்து மாற்றம் தொடர்பாக போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-​ 

கிரிக்கெட் போட்டி நடைபெறும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் போட்டி முடியும் வரையிலும் போக்குவரத்து நெரிசலுக்கு தகுந்தவகையில், கீழ்க்கண்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். 

இந்த சாலை காலை 7 மணி முதல் 11 மணி வரை தற்காலிகமாக ஒருவழிச்சாலையாக மாற்றப்படும். பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு வழியாக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் ரோட்டுக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. 

அதேபோல், மாலை 4 மணி முதல் 6 மணி வரை வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் ரோட்டுக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும். பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் ரோட்டுக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.  

போட்டி முடிந்தவுடன் பாரதி சாலை​ திருவல்லிக்கேணி ஹைரோடு சந்திப்பில் இருந்து கண்ணகி சிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. கெனால் சாலையில் பாரதி சாலையில் இருந்து வாகன அனுமதி அட்டை பி, டி, டபிள்யூ, வி வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். 

வாலாஜா சாலையில் இருந்து கெனால் சாலையில் போட்டி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அண்ணா சாலையில் இருந்து வரும் எம், பி, டி, டபிள்யூ, வி ஆகிய அனுமதி அட்டை கொண்ட வாகனங்கள், வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை சந்திப்பு, பாரதி சாலை மற்றும் கெனால் ரோடு வழியாக அந்தந்த வாகனங்கள் நிறுத்துமிடங்களுக்கு சென்றடையலாம். 

பி மற்றும் ஆர் எழுத்துக்கள் கொண்ட அனுமதி அட்டை வைத்திருக்கும் வாகனங்கள் வாலாஜா சாலை வழியாகவே சென்று அந்தந்த வாகனங்கள் நிறுத்துமிடங்களுக்கு போகலாம். போட்டி முடிந்தவுடன் வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் சாலை வழியாக பாரதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும்.  

போர் நினைவுச்சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் பி, டி, டபிள்யூ, வி ஆகிய அனுமதி அட்டை கொண்ட வாகனங்கள் பாரதி சாலை வழியாக கெனால் ரோடுக்கு சென்று அந்தந்த வாகன நிறுத்தங்களுக்கு போகலாம்.  

அனுமதி அட்டை இல்லாமல் அண்ணா சாலையில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் வாலாஜா ரோடு, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக சென்று கடற்கரை உட்புற சாலையில் வாகனங்களை நிறுத்தலாம். இதே வாகனங்கள் போர் நினைவுச்சின்னத்தில் இருந்து வருபவை காமராஜர் சாலை வழியாக சென்று பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு முன்பாக இருக்கும் கடற்கரை உட்புற சாலைக்கு போகலாம். 

இதுபோன்ற வாகனங்கள் காந்தி சிலையில் இருந்து வந்தால் சீரணி அரங்க உட்புற சாலை வழியாக சென்று கடற்கரை உட்புற சாலையில் நிறுத்தலாம். வி அனுமதி அட்டை உள்ள வாகனம் விக்டோரியா விடுதியிலும், டபிள்யூ அனுமதி அட்டை உள்ள வாகனம் வார்டன் விடுதியிலும், டி அனுமதி அட்டை உள்ள வாகனம் டி.என்.சி.ஏ.யிலும், பி அனுமதி அட்டை உள்ள வாகனம் பெவிலியனிலும் நிறுத்தலாம். 

எம் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் எம்.சி.சி.யிலும், ஆர் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் ரெயில்வே மேம்பாலத்துக்கு கீழும், பி அனுமதி அட்டையுள்ள வாகனத்தினர் பட்டாபிராம் முனையிலும் வாகனங்களை நிறுத்தலாம். 

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்