முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செய்தி தாள்களில் வந்துள்ள செய்திக்கு தா.பாண்டியன் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.12 - தின நாளிதழ்கள், வார ஏடுகளில் வந்துள்ள தவறான செய்திக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் மறுப்பு தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜூலை ஆறாம் தேதியன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள இரு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் கூட்டத்தில் நான் (தா.பாண்டியன்) பேசும்போது, தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு அமைச்சர்களை மாற்றுவதைத் தவிர வேறு எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை எனக் குற்றம்சாட்டிப் பேசியதாக சில தின, வார ஏடுகளில் வந்துள்ள செய்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தேன். எனவே, அதை மறுத்தும், விளக்கியும், எங்கள் கட்சியின் கருத்தையும், நிலையையும் தெளிவுபடுத்துகிறேன்.

தமிழ்நாட்டு மக்கள் நடந்து முடிந்த சட்டசபைக்கான தேர்தலில் மாற்றத்தை விரும்பி, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மையும், அதிமுக கூட்டணிக்கும் மகத்தான வெற்றியையும் தேடித்தந்தனர். மக்கள் வழங்கிய தீர்ப்பின்படி ஜெயலலிதா தலைமையில் அமைந்த ஆட்சி முதன் முதலாகக் கூட்டிய குறுகிய கால சட்டமன்றக் கூட்டத் தொடரில், இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டு நிலை நாட்டுவதற்கான, மிகத் தெளிவான, திட்டவட்டமான ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றியுள்ளது.

அதையொட்டி தமிழக மீனவர்களின் உயிரையும், உரிமையையும், பாதுகாத்திட, கச்சத்தீவிற்கு உரிமை கோரி, கட்சியின் சார்பில் தொடரப்பட்ட வழக்கிற்குப் பதிலாக தமிழக அரசையும் வாதியாகச் சேர்த்து தமிழக மக்களின் கோரிக்கையாக மாற்றியது. 20 கிலோ அரிசியை குடும்ப அடையாள அட்டை உள்ளோர்க்கு இலவசமாக, விளம்பரம் செய்யாமல் வழங்கிய மாண்பு, தனியார் கேபிள் இணைப்புகளை அகற்றி, அரசு கேபிள் இணைப்புக்கு நடவடிக்கை எடுத்திருப்பது, குடும்ப ஆதிக்க சொத்துப் பறிப்பு, குவிப்பு, ஆட்சி நடைபெற்ற காலத்தில் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாகப் பறிக்கப்பட்ட நிலங்கள், வீடுகள், சொத்துக்களை மீட்டுக் கொடுக்க தனிக் காவல்துறை பிரிவை ஏற்படுத்தியிருப்பது, டில்லிக்கு சென்று தமிழ்நாட்டின் சீர்கேடு, நிதிநெருக்கடிகளை விளக்கிக் கூறி, உணர்த்தியன் மூலம் ரூ. 23,500 கோடி அளவிற்கான பணத்தை திட்டச் செலவிற்காக பெற்றுவந்துள்ள சாதனை ஆகியவற்றை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டி வாழ்த்தியுள்ளது.

எனவே குற்றம்சாட்ட வேண்டிய குறை ஏதும் கூறப்படவில்லை. மாறாக, மாநில அரசு மீது கடந்த கால ஆட்சி சுமத்திவிட்டுப் போயுள்ள அநியாய ஒன்றரை லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்சுமை, நிர்வாகச் சீர்கேடு, ஆகியவற்றைச் சமாளிப்பதில் நாமும் ஒத்துழைக்க வேண்டியிருக்கிறது. நமது கடமை தேர்தலோடு முடிந்து விடவில்லை என்றே விளக்கிப் பேசினேன். மக்களுக்கு தெளிவுபடுத்த இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன்.

இவ்வாறு தா.பாண்டியன் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்