முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் சுகாதார வளாகங்களை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வண்டும்- ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.- 27 - அ.தி.மு.க ஆட்சியில் துவக்கப்பட்டு தி.மு.க. ஆட்சியில் பயன்படுத்தாமல் போடப்பட்ட ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்களை 3 மாதங்களுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, மகளிர் சுகாதாரத்தில் மிகுந்த அக்கறைக் கொண்டு பல முன்னோடி திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. ஊரகப் பகுதிகளில் சுகாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடனும், நகர பகுதிகளிலுள்ள மகளிருக்கு சமமாக ஊரக பகுதிகளிலுள்ள மகளிரும் சுகாதாரமான சூழல் பெற வேண்டும் என்ற அடிப்படையிலும், ஊரகப் பகுதி மகளிருக்கு பாதுகாப்பு மற்றும் தனிமை வசதியுடன் கூடிய கழிவறைகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற உயரிய எண்ணத்தின் அடிப்படையிலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா 2001-ம் ஆண்டே ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் அமைக்கும் உன்னத திட்டத்தினை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் சுகாதார புரட்சிக்கு வித்திட்டவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
இந்த திட்டத்தின்படி, துவக்கத்தில், ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. ஒவ்வொரு சுகாதார வளாகமும், 733 சதுரஅடி பரப்பளவில், 2 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 12 கழிவறைகள், 2 குளியல் அறைகள், ஒரு மின்சார அறை மற்றும் வளாகத்தின் மத்தியில் தண்ணீர் தொட்டியுடன் கூடிய இரண்டு துணி துவைக்கும் கற்கள் ஆகிய வசதிகளுடன் உருவாக்கப்பட்டது. 2001-02 மற்றும் 2002-03 ஆம் ஆண்டுகளில் மொத்தம் 7704 மகளிர் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. 2003-04 ஆம் ஆண்டில் மகளிர்  சுகாதார வளாகத்திற்கான அலகு தொகை உயர்த்தப்பட்டு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 4914 சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. இந்த வளாகங்கள், 8 கழிவறைகள், 2 குழந்தைகளுக்கான கழிவறைகள், 3 குளியல் அறைகள், ஒரு மின்சார அறை மற்றும் துணி துவைப்பதற்கான வசதிகளுடன் அமைக்கப்பட்டன. 2003-04 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 12,618 ஊராட்சிகளிலும் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் கட்டி முடிக்கப்பட்டு, அவற்றால், ஊரகப் பகுதி மகளிர் மிகுந்த பயன் அடைந்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த மகளிர் சுகாதார வளாகங்கள் பராமரிப்பின்மை, தண்ணீர் பற்றாக்குறை, மின் வசதியின்மை ஆகிய காரணங்களால் போதிய அளவிற்கு பயன்படுத்தப்படவில்லை என்ற தகவலை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்களை புதுப்பிக்கத் தேவையான முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டு, அனைத்து ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்களையும் மூன்று மாத காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு ஆணையிட்டுள்ளார். மேலும் சுகாதார வளாகங்களை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஊரக மகளிரிடையே ஏற்படுத்த உடனடியாக தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, ஊரக பகுதிகளில் சுகாதார பழக்க வழக்கங்கள், கழிப்பிட வசதிகளை பயன்படுத்துதல், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீய விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வை ஊரக பகுதிகளிலுள்ள மகளிரிடையே ஏற்படுத்த தனியார் நிறுவனங்ள், தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் ஆகியவை ஊக்கப்படுத்தப்படும். மேலும், அனைத்து ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்களிலும் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மூன்று மாதக்காலத்திற்குள் அவை முழு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்