முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தாத ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். இளைஞரணி நன்றி

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை - 28 - மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியபோதும்,  தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் நலனை முன்னிட்டு பேருந்து கட்டணத்தை உயர்த்தாத தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். இளைஞரணி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.  அ.தி.மு.க. நிரந்தரப் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான  ஜெயலலிதாவின் மேலான ஆணைங்கிணங்க  எம்.ஜி.ஆர். இளைஞர் அணியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை நிலையத்தில்  நேற்று காலை 10 மணிக்கு நடைப்பெற்றது. இதில் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஆதிராஜாராம் தலைமை தாங்கினார். கே.ஏ.கே.முகில்,  என்.சதன் பிரபாகரன், செவ்வை மு.சம்பத்குமார் ஆகிய இளைஞரணி செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.   மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் எஸ்.ராஜலிங்கம் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்றார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட அ.தி.மு.க. அவை தலைவர் இ.மதுசூதனன், அமைப்பு செயலாளர்கள் சி.பொன்னையன், இ.வி.கே.சுலோச்சனா சம்பத், பா.வளர்மதி எம்.எல்.ஏ., மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.  திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் எஸ்.பத்மநாபன் நன்றியுரை வழங்கினார்.  பின்னர் இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.      
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், மைனாரிட்டி தி.மு.க.வின் பணபலத்தையும், அராஜகத்தையும் தூள் தூளாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சார சுற்றுப்பயணம் செய்து, வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று அயராமல் போராடி, அ.தி.மு.க.வையும், கூட்டணி கட்சியினரையும் வெற்றி பெற வைத்து, கருணாநிதியின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுகட்டி, மகத்தான சாதனை படைத்துள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர்  தமிழக முதல்வருக்கு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தனது நன்றி நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறது.
இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்த போர்க் குற்றவாளி ராஜபக்ஷேவை, குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டுமென்று, ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டியும், இலங்கைத் தமிழர்கள் வாழ்விடங்களில் சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும், அதற்கு இணங்க மறுக்கும் ராஜபக்ஷே அரசு மீது, இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று மத்திய அரசினை வலியுறுத்தும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து, அதை ஏக மனதாக நிறைவேற்றி, டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் மத்திய அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நேரில் வலியுறுத்தியதோடு, தன்னை சந்திக்க வந்த, அமெரிக்க வெளி விவகாரத்துறை செயலர்  ஹிலாரி கிளிண்டனிடம் விவாதித்ததின் மூலம் அமெரிக்க நாடாளுமன்ற வெளி விவகாரக்குழு, இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற, அடிப்படை அமைத்துக் கொடுத்த, உலகத் தமிழர்கள் போற்றும் உன்னதத் தலைவி  தமிழக முதல்வர் சாதுர்யமிக்க பேராற்றல் கண்டு, உலகத் தமிழர்கள் தங்கள் வாழ்வில் நிம்மதி கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.  இலங்கையில் முள்வேலி முகாம்களில் சித்திரவதை அனுபவித்து வரும் தமிழர்கள் அனாதைகள் அல்ல! அவர்களை காக்க, தாய் தமிழகத்தின் முதல்வர் இருக்கிறார் என்ற நம்பிக்கை தந்து, அரும்பெரும் சாதனை செய்த  தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நன்றி தெரிவித்து கொள்கிறது.
 தமிழக முதல்வர், தலைநகர் டெல்லி சென்றபோது, ஜெயலலிதா தங்கியிருந்த, தமிழ்நாடு இல்லத்திற்கே பிரதமர் அலுவலக சிறப்பு காரினை அனுப்பி அழைத்ததோடு, வீட்டு வாயிலில் காத்திருந்து பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் வரவேற்றது எந்த முதலமைச்சருக்கும், இதுவரை அளிக்கப்படாத சிறப்பு வரவேற்பு என்று தலைநகரத்து பத்திரிகைகள் பாராட்டுகின்றன.
உலக வல்லரசுகளுக்கெல்லாம் தலைமையான அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமாவுக்கு அடுத்த நிலையில் இருக்கும், அமெரிக்க அரசின் வெளி விவகாரத்துறை செயலர்  ஹிலாரி கிளிண்டன், சென்னை வந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, அலுவலகத்தில் சந்தித்து, ஒரு மணி நேரம் விவாதித்து ஜெயலலிதாவின் செயலாற்றலை பாராட்டி, மகிழ்ந்து, உடனடியாக, இலங்கைமீது பொருளாதாரத்தடை விதிக்கச் செய்ததை கூர்ந்து கவனித்தால், எந்தொரு மாநில முதலமைச்சருக்கும், அரசியல் தலைவருக்கும் இந்தியாவில் இதுவரை கிடைக்காத சிறப்பு ஆகும்.
இந்தியாவை வழி நடத்துகின்ற அறிவாற்றல் மிக்க தேசத் தலைவியாக தமிழக முதல்வர் ஜெயலலிதா உயர்ந்தோங்கி நிற்கிறார் என்று இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கைகளும், ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருவதை அளப்பரிய உவகையாக அமைந்துள்ளது.
அ.தி.மு.க. நிறுவனர்  எம்.ஜி.ஆர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த நோக்கத்தோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றம் செய்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறும் வகையில், எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு ஜெயலலிதா, இந்திய அரசியலை தீர்மானிக்கும் மகாசக்தியாக உருவாகி விட்டார் என்பதை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாதென்பதை  எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பெருமிதத்துடன் பறைசாற்றிக் கொள்கிறது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களின் நலன் காக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பெற்றுத் தந்த, திராவிட இயக்க சரித்திர சாதனையான 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சட்ட பாதுகாப்பை தொடர்ந்து நிலை நிறுத்தும் வகையில், ராஜ தந்திரத்தோடு சரியான நேரத்தில் உரிய ஆணையை இயற்றி, இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களின் வழி காட்டியாக, காவல் அரணாக, திகழும் சமூக நீnullதி காத்த வீராங்கனை, திராவிட இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி  தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு,  எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நன்றி தெரிவித்து கொள்கிறது.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவாறு, மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மோசடியாக நில ஆக்கிரமிப்பு செய்தவர்கள்மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், நிலத்தை பறிகொடுத்தவர்களுக்கு அவர்களின் நிலம் கிடைக்கவும், காவல்துறையில் நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவு ஏற்படுத்தியும், சிறப்பு nullநீதிமன்றம் அமைக்க உடனடி நடவடிக்கை எடுத்தும், சாதனை படைத்துவரும்  தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு,  எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நன்றி தெரிவித்து கொள்கிறது.
அவசரத்தில் அள்ளித் தெளித்த மாக்கோலம் போல, கருணாநிதி தலைமைச் செயலகம் கட்டுவதாகக் கூறி, தான்தோன்றித்தனமாக மனம் போன போக்கில், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்த பழமை வாய்ந்த கட்டிடங்களை இடித்து தள்ளிவிட்டு, அரைகுறை கட்டிடம் கட்டி, சினிமா செட்டிங் போட்டு, பிரதமரை ஏமாற்றி புதுமனை புகுவிழா நடத்தி, தலைமை செயலகம் மாற்றி விட்டேன் என்று அறிவித்து, அரசு பணத்தினை ஊதாரித்தனமாக 1000 கோடிகளுக்கு மேல் செலவழித்ததில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை, ஊழல்களை விசாரணை செய்ய nullநீதிபதி தங்கராஜ் தலைமையில், விசாரணைக் கமிஷன் அமைத்திட்ட  தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மத்திய அரசு, பெட்ரோல், டீசல், கேஸ், மண்ணெண்ணெய் விலைகளை தாறுமாறாக உயர்த்தி மக்கள்மீது கடும் விலையேற்றத்தை திணித்து, பாதிப்புக்குள்ளாக்கி உள்ள நிலையில்,  தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு மீது, இதுவரை விதிக்கப்பட்டு வந்த மதிப்பு கூட்டுவரி (வாட்) முழுவதும் nullநீக்கம் செய்து, இனி தமிழ்நாட்டில் சமையல் எரிவாயுமீது வாட் வரி இல்லை என்று அறிவித்து, ஏழை​எளிய மக்கள் குறிப்பாக, தாய்மார்கள் நெஞ்சில் பால் வார்த்துள்ளார்கள். அதுபோலவே, டீசல் விலையை  மத்திய அரசு உயர்த்திய பின்னரும், தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயராமல் பாதுகாத்துள்ளார். கருணாநிதி கட்சி அங்கம் வகிக்கும் மத்திய அரசின், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தமிழக மக்களை காத்து வரும்  தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு,  எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நன்றி தெரிவித்து கொள்கிறது.
மத்திய அரசிலும், காங்கிரஸ் கூட்டணியிலும் பங்கேற்று பதவி சுகம் அனுபவித்துக் கொண்டு, விலைவாசி உயர்வுகளுக்கு கூட்டுப் பொறுப்பேற்க வேண்டிய கருணாநிதி தன் கட்சி பொதுக் குழுவில் மத்திய அரசு அடிக்கடி ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவதாக கபட தீர்மானம் இயற்றி, தன் பொறுப்பை தட்டிக்கழிக்கும் இழி செயலை,  எம்.ஜி.ஆர். இளைஞர் அணி கடுமையாக கண்டிக்கின்றது.
ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அத்தனையும் நிறைவேற்றி சாதனை படைத்து வருவதையும், கழக அரசின் பட்ஜெட் மூலம் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்துவதையும், அ.தி.மு.க. செயற்குழு தீர்மானங்களையும் பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும்  எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
எதிர்வரும் தமிழக உள்ளாட்சி தேர்தல்களில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர், தமிழக முதல்வர் அறிவிக்கின்ற வேட்பாளர்கள் அனைவரையும், வெற்றிப் பெறச் செய்து, வெற்றிக் கனியை ஜெயலலிதாவுக்கு மலர் பாதங்களில் சமர்ப்பிக்க, கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சபதமேற்று உழைக்க உறுதியேற்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்