முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யின் அடுத்த முதல்வர் அகிலேஷ்? முலாயம்சிங்கா?

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

லக்னோ, மார்ச் 9 - உத்தரபிரதேச மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இருந்தாலும் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் முலாயம் சிங் யாதவே மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 225 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த கட்சியின் வெற்றிக்கு முலாயம் சிங் யாதவ் ஒரு காரணமாக இருந்தாலும்கூட, அவரது மகன் அகிலேஷ் யாதவின் அதிரடி பிரச்சாரமும் ஒரு காரணமாக அமைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து உ.பி.யில் கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவே நான்காவது முறையாக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் கட்சியின் வெற்றிக்காக அரும்பாடுபட்ட அகிலேஷ் யாதவே முதல்வராக வரவேண்டும் என்று சமாஜ்வாடி கட்சியினர் விரும்புகின்றனர். இதற்கிடையில் தங்களது கட்சியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவர்னர் பி.என்.ஜோஷியை சந்தித்து முலாயம்சிங் யாதவ் கேட்டுக்கொண்டார். 

இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சியின் சில முக்கிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் லக்னோவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உ.பி.யின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்தும், புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா எப்போது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவே மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.  என்றாலும் யார் முதல்வர் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை முலாயம்சிங் யாதவிடமே விட்டுவிடுவதாகவும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் சிவ்பால்சிங் யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சமாஜ்வாடி கட்சியின் சில முக்கிய தலைவர்கள் லக்னோவுக்கு தாமதமாக வந்துகொண்டுள்ளனர். மோகன்சிங் என்ற முக்கிய தலைவர் டெல்லியில் மருத்துவசிகிச்சை பெற்று வருகிறார். இவர்களெல்லாம் கூடி நாளை முக்கிய முடிவை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அந்த கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்