முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச கிரிக்கெட்டில் எடுக்கப்படும் ஒவ்வொரு சதமும் முக்கியமானதே : சொல்கிறார் ரிஷப் பண்ட்

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      விளையாட்டு
Rishab-Bund 2022 07 02

Source: provided

பர்மிங்காம் : சர்வதேச கிரிக்கெட்டில் எடுக்கப்படும் ஒவ்வொரு சதமும் முக்கியமானதாகும் என்று தெரிவித்துள்ள இந்திய வீரர் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுப்பாட்டம் மிகவும் முக்கியமானது எனவும் கூறியுள்ளார். 

பும்ரா தலைமையில்....

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5-வது டெஸ்ட், இப்போது நடைபெறுகிறது. ரோஹித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பும்ரா இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படுகிறார். பிர்மிங்கமில் நடைபெறும் 5-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷர்துல் தாக்குர், ஜடேஜா, விஹாரி, புஜாரா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். அஸ்வினுக்கு இந்தமுறையும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

146 ரன்களுடன்... 

முதல் நாள் முடிவில் இந்திய அணி, 73 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்களுடன் தடுமாறியபோது ரிஷப் பந்தும் ஜடேஜாவும் அருமையான கூட்டணியை அமைத்தார்கள். ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 89 பந்துகளில் சதமடித்தார். அதன்பிறகும் நன்கு விளையாடி 111 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அழுத்தம் ஏற்பட்டது...

அதிரடியாக விளையாடி சதமெடுத்த ரிஷப் பண்ட், செய்தியாளர்களிடம் கூறியதாவது., ஆரம்பத்தில் மூன்று நான்கு விக்கெட்டுகளை இழந்தபோது அழுத்தம் ஏற்பட்டது. நல்ல கூட்டணியை நாங்கள் அமைக்கவேண்டும் என எண்ணினேன். அழுத்தத்தின் மீது கவனம் செலுத்தினால் நாம் எதிர்பார்க்கும் முடிவு கிடைக்காது. நான் செயல்முறையில் கவனம் செலுத்துவேன். அதுவே எனக்குத் தேவைப்பட்ட முடிவுகளைப் பெரும்பாலும் தந்துவிடும். ஒரு வீரராக எதிரணி என்ன செய்ய விரும்புகிறது என்பதைப் பற்றி யோசிக்க மாட்டேன். பதிலாக, நான் என்ன செய்யவேண்டும் என்பதையே நினைப்பேன். என்னுடைய சிறுவயதில் பயிற்சியில் ஈடுபட்டபோது என் பயிற்சியாளர் எப்போதும் சொல்வார், நீ பந்தை அடிக்கலாம், அதேசமயம் தடுப்பாட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று. 

தடுப்பாட்டம் முக்கியம்...

டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுப்பாட்டம் மிகவும் முக்கியம். எப்போதும் அடித்துக் கொண்டிருக்க முடியாது. அதேபோல எப்போதும் தடுப்பாட்டம் ஆட முடியாது. அடிக்கவேண்டிய பந்தாக இருந்தால் அடிப்பேன். தடுக்க வேண்டிய பந்தாக இருந்தால் தடுப்பாட்டம் ஆடுவேன். சர்வதேச கிரிக்கெட்டில் எடுக்கப்படும் ஒவ்வொரு சதமும் முக்கியமானதாகும். எனவே இந்தச் சதம் அடித்தது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து