முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக கட்சி தொடங்குபவர்கள் தி.மு.க. அழிய வேண்டும் என நினைக்கின்றனர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      தமிழகம்
CM-2 2024-11-04

Source: provided

சென்னை : தி.மு.க. வளர்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான், புதிது, புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் தி.மு.க. அழிய வேண்டும் என்று கூறுகின்றனர். அண்ணா கூறுவதுபோல் ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், வாழ்க வசவாளர்கள். தேவையில்லாமல் எல்லோருக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தேவையும் இல்லை. எங்களுடைய நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அனிதா அகாடமி மூலம் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கலைஞர் இலவச கண் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றவர்களுக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்கினார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,

கடந்த 2017-ல் தங்கை அனிதா  தற்கொலை செய்து கொண்டபோது, நாம் அனைவரும் தாங்கமுடியாத வேதனைக்கு ஆளானோம்.  நீட் தேர்வு அனிதாவின் கனவை சிதைத்து, உயிரைப் பறித்து விட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது. 

நீட் தேர்வுக்கு எதிரான தமிழக மக்களின் ஒருமித்த குரலுக்கு நிச்சயம் ஒருநாள் மத்திய அரசுப் பணியத்தான் போகிறது. அது நடந்துதான் தீரும். அதில் எந்த மாற்றமும் இல்லை. இன்றைக்கு இல்லாவிட்டாலும், நாளை அல்லது நாளை மறுநாள் அது நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அனிதாவின் நினைவாக முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில், 2019-ம் ஆண்டு இந்த அனிதா அகாடமி தொடங்கப்பட்டது. இங்கு இதுவரை 12 குழுக்களில் 974 பெண்களும், 8 குழுக்களில 538 ஆண்களும் என இதுவரை 1512 பேர் Tally பயிற்சி முடித்து இலவச லேப்டாப் பெற்றுள்ளனர். தையல் பயிற்சி முடித்த 2536 மகளிர் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு திட்டங்களையும் இந்த திராவிட மாடல் அரசு பார்த்துப் பார்த்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. நான் முதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட பல திட்டங்கள் மூலம் ஏராளமான இளைஞர்களும், இளம் பெண்களும் பயனடைந்து வருகின்றனர். தமிழக இளைஞர்களை அவர்களுடைய எல்லா நிலைகளிலும் இருந்து தகுதி வாய்ந்தவர்களாக உயர்த்துவதுதான் திராவிட மாடல் அரசின் லட்சியம். ஆனால், இன்றைக்கு இந்த ஆட்சி எதுவும் செய்யவில்லை என்று சிலர் குறைகூறிக் கொண்டு உள்ளனர்.

அவர்கள் இதையெல்லாம் பார்க்க வேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும், தி.மு.க. ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளாகப் போகிறது. தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை கூறினோமோ, அதையெல்லாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். எஞ்சியிருக்கிற ஒன்றிரண்டு தேர்தல் வாக்குறுதிகளையும், உறுதியாக விரைவாக நிறைவேற்றப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

தொழில்துறையில் தமிழகம் இன்றைக்கு முதலிடத்தைப் பெற்றுள்ளது. பல தொழில்முனைவோர்கள் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டுள்ளனர். அதற்கு தேவையான மனித ஆற்றலை கல்லூரிகளில் நாம் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். தொலைநோக்கு சிந்தனை கொண்ட இந்தியாவிலேயே சிறந்த அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

சாதனை செய்யும் அரசாங்கமாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு வெளியிடும் புள்ளி விவர அறிக்கைகளில் முதன்மையான இடம்பெறக்கூடிய அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திட்டங்களை அறிவித்துவிட்டுப் போகலாம். நிதியைக்கூட ஒதுக்கிவிடலாம். ஆனால், இதையெல்லாம்விட, அந்த திட்டங்கள் முறையாக மக்களைச் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்கக்கூடிய அரசாக இந்த அரசு இருந்து வருகிறது. 

யார் யாரோ, வருகிறவர்கள் எல்லாம் புதிதுபுதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் தி.மு.க. அழிய வேண்டும், ஒழிய வேண்டும் என்று கூறும் நிலையில்தான் வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் நான் பணிவோடு கேட்டுக் கொள்வது, நான்கு ஆண்டுகளைத் தொடக்கூடிய நிலையில் இந்த ஆட்சி செய்திருக்கக்கூடிய சாதனைகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.

எங்களுடைய போக்கு, மக்களுக்கு செய்யக்கூடியதுதான். தேவையில்லாமல் எல்லோருக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தேவையும் இல்லை.  எங்களுடைய நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. மக்களுக்கான பணி செய்வதற்கே எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து