முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலி குறித்து ஜோதிடர் கணிப்பு

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      விளையாட்டு
Verat Koil 2023 08 13

Source: provided

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தற்சமயத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படுகிறார். தற்சமயம் பார்மின்றி தவித்து வருகிறார். அவர் மீண்டும் பழைய பார்மிற்கு திரும்புவார் என்று எதிர்பார்ப்புடன் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே விராட் கோலி எப்போது ஓய்வு பெறுவார்? என்பதே பலரது கேள்வியாக இருந்து வருகிறது. இந்நிலையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று ஜோதிடர் ஒருவரை அழைத்து விராட் கோலியின் எதிர்காலம் குறித்த சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் அளித்த ஜோதிடர் கூறுகையில் : சமீப காலமாகவே என்னிடம் விராட் கோலி எவ்வளவு காலம் விளையாடுவார்? என்று கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது. 

இந்த கேள்விக்கு நான் கூறும் பதில் ஒன்றுதான் : மக்கள் விராட் கோலி விளையாடுவதை பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கின்றனர். என்னை பொறுத்தவரை விராட் கோலி 2027 ஆம் ஆண்டு வரை நிச்சயம் விளையாடுவார். அதிலும் குறிப்பாக எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் அவரது ஆட்டம் மிகச்சிறப்பாக இருக்கும். இனிவரும் சில ஆண்டுகள்தான் விராட் கோலி தனது உச்சகட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அதனால் நீங்கள் அனைவரும் எதிர்பார்த்தபடியே உங்களது நட்சத்திர வீரர் அசத்துவார்" என்று கூறினார்.

____________________________________________________________________________________________

அல்ஜாரி ஜோசப் விளையாட தடை 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலாவது இன்னிங்ஸில் 4 வது ஓவரின் போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோர்டன் காக்ஸ் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது அல்ஜாரி ஜோசப் பவுலிங் செய்யவந்தபோது இரண்டு பேர் ஸ்லிபில் இருந்தனர். அல்ஜாரி ஜோசப் முதல் பந்தை வெளியே வீசினார். பேட்டர் அதை அடிக்கவில்லை. அடுத்த பந்தின் போது ஸ்லிப் இருந்த வீரரை பாய்ண்ட் திசையில் நிற்க வைத்துள்ளார் கேப்டன் ஹோப். இதனால், கேப்டனுக்கும், அல்ஜாரி ஜோசப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஒவர் முடிந்த பின் ஜோசப் மைதானத்தைவிட்டு வெளியேறினார். பயிற்சியாளர் டேரன் ஷமி பவுண்டரி எல்லையில் இருந்து குரல் கொடுத்த போதும், அல்ஜாரி ஜோசப் கண்டுகொள்ளாமல் வெளியே சென்றார்.

அல்ஜாரி ஜோசப் மைதானத்தை விட்டு வெளியேறியதால், மாற்றுவீரர் யாரும் களமிறங்க முடியாத சூழலால் அடுத்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் விளையாடினர். இதனால், பார்வையாளர்கள், நடுவர்கள் மத்தியில் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், கேப்டனுடன் வாக்குவாதம் செய்துவிட்டு காரணம் சொல்லாமல், மைதானத்தை விட்டு வெளியேறிய அல்ஜாரி ஜோசப்புக்கு 2 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

____________________________________________________________________________________________

சாதனையை நழுவ விட்ட ரிஸ்வான்

அடிலெய்டில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை முதலில் பேட் செய்ய அழைத்த பாகிஸ்தான் அற்புதமான வேகப்பந்து வீச்சில் ஆஸ்திரேலியாவை 35 ஓவர்களில் 163 ரன்களுக்குச் சுருட்டியது. இதில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் இரண்டாவது முறையாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கைக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

இந்த இலக்கை வெற்றிகரமாக விரட்டினால் கடந்த மெல்போர்ன் போட்டியில் நெருக்கமாகத் தோற்றதற்குப் பதிலடி கொடுத்து தொடரில் சமநிலையை பாகிஸ்தான் எய்த முடியும். பாகிஸ்தான் கேப்டனும் விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான், 6 கேட்ச்களை எடுத்து ஆடம் கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சர், டி காக், சர்பராஸ் அகமது உள்ளிட்ட விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். கூடுதலாக ஒரு கேட்சைப் பிடித்திருந்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 7 கேட்ச்கள் பிடித்தவர் என்ற புதிய விக்கெட் கீப்பிங் உலக சாதனை புரிந்திருப்பார் ரிஸ்வான். அதற்கான வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. ஆனால், ஆடம் ஜாம்பா கொடுத்த கேட்சை நழுவ விட்டதால் உலக சாதனை வாய்ப்பைக் கோட்டை விட்டார் ரிஸ்வான்.

____________________________________________________________________________________________

ஆப்கானிஸ்தான் வீரர் ஓய்வு

ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் முகமது நபி (வயது 39). இவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக தற்போது வரை 3 டெஸ்ட், 165 ஒருநாள் மற்றும் 128 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடி வருகிறார். இந்நிலையில், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து முகமது நபி ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி நஸீப் கான் இதை உறுதிப்படுத்தியுள்ளார். டி20 போட்டிகளில் நபி தொடர்ந்து விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி நஸீப் கான் கூறியதாவது, ஆமாம், நபி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தனது விருப்பத்தை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஓய்வு பெறுவதாக சில மாதங்களுக்கு முன்பு இதை எங்களிடம் தெரிவித்தார். டி20யில் அவர் விளையாடுவார் என நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

____________________________________________________________________________________________

தந்தையானார் டிராவிஸ் ஹெட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட்டின் மனைவி ஜெஸ்ஸிகா டேவிட்டுக்கு கடந்த நவம்பர் 4 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான டிராவிஸ் ஹெட் மற்றும் ஜெஸ்ஸிகா டேவிட் ஹெட் தம்பதிக்கு கடந்த திங்கள்கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு ஹாரிஸன் ஜார்ஜ் ஹெட் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

இந்தத் தம்பதிக்கு 2022 ஆம் ஆண்டு மிலா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன்பின்னர் 2023 ஆம் ஆண்டு ஜெஸ்ஸிகா டேவிட்டை டிராவிஸ் ஹெட் திருமணம் செய்துகொண்டார். டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியா மட்டுமின்றி இந்தியாவிலும் மிகவும் பிரபலமானவர். அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன ஹெட் பிக்-பாஸ் மற்றும் ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். ஹெட் ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து