முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி மீது முதல்வர் ஜெயலலிதா மறைமுக தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.15 – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மேற்கொண்ட பெரு முயற்சியின் காரணமாக தீய சக்தியின் பிடியில் இருந்து அண்ணாவின் இயக்கம் காப்பாற்றப்பட்டது என்றும் மக்கள் தொண்டில் முழு மனதோடு பாடுபட, பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான இப்பொன்னாளில் சூளுரை ஏற்போம் என்றும் முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வரைந்துள்ள மடல் வருமாறு:-

இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே! தமிழ் மக்களின் பல்லாயிரம் ஆண்டு வரலாற்றில் குன்றாப் புகழுடைய மனிதராக நிலைத்து நிற்கும் மகத்தான தலைவராம் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 106-ஆவது பிறந்த நாள் என்னும் மகிழ்ச்சியான இந்தத் தருணத்தில், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய உங்கள் அனைவரையும் இந்த மடல் வழியாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

உலக மொழிகளில் மிகவும் தொன்மை வாய்ந்த மொழி நம் தமிழ் மொழி. தமிழ்ச் சமூகம் உலகின் மற்ற மானுட குழுக்களுக்கு வழிகாட்டியாகவும், எடுத்துக்காட்டாகவும் வாழுகின்ற வாய்ப்பினைப் பெற்ற சமூகம்.

இலக்கியம், இலக்கணம், அறிவியல் கருத்துகள், நவீன சிந்தனைகள், புரட்சிகரமான சமூகப் பார்வை, எளியோருக்கும், நலிவடைந்தோருக்கும் உயர்வையும், சம வாய்ப்பையும்

தர வேண்டும் என்ற அறநெறி ஆகியவற்றை தமிழ்ச் சமூகம் பல்லாயிரம் ஆண்டுகளாக

தன் வாழ்க்கை முறையாகக் கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறது.

இத்தகைய புகழுக்குரிய உயர்ந்த நம் இனத்தில் பெருமைக்குரிய பிறப்பாக வந்து தோன்றியவர் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள். பல்வேறு சிறப்புகளையும் தனித் தன்மைகளையும் கொண்ட தமிழ்ச் சமூகம் காலப் போக்கில் பல வகைகளிலும் பின்தங்கி அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக அமைப்பு ரீதியாகவும் பெரிதும் நலிவுற்ற சமூகமாக மாறிக் கிடப்பதைக் கண்டு மனம் வருந்தினார் நம் பேரறிஞர் அண்ணா.

இந்த நிலையை மாற்றிட வேண்டும்; தமிழர்கள் இழந்த புகழை ஈட்டிட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்திற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்து அதற்கான பாதையாகவும், வழிகாட்டியாகவும், தந்தை பெரியாரின் நெறிகளை ஏற்று அதன் வழி நடை போட்டார் பேரறிஞர் அண்ணா.

விடுதலை பெற்ற இந்தியாவில் மாற்றங்களையும், புரட்சிகளையும் தேர்தல் வழியாக வன்முறை இன்றி செய்து முடிக்க முடியும் என்ற அசைக்க முடியாத ஜனநாயக உணர்வுகளைக் கொண்ட பேரறிஞர் அண்ணா, கொட்டும் மழையில் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தொடங்கினார்.

உயர்ந்த சிந்தனைகளும், சமூக சமத்துவத்தின் மீது நம்பிக்கையும் கொண்ட மனிதாபிமானம் மிக்க பல தலைவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையை ஏற்று அவர் கண்ட இயக்கத்தை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தனர். அண்ணா அவர்களின் இயக்கம் மிகக் குறுகிய காலத்தில் மக்களின் மனதில் நிரந்தர இடம் பெற்றது. `இது வரலாற்றில் ஒரு புதுமை!' என்று எல்லோரும் வியக்கும் வகையில்

1967-ல் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றது. பேரறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் வெற்றி ஒவ்வொன்றிலும் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் கொள்கை மாறா உழைப்பும், கொண்டதையெல்லாம் அள்ளித் தரும் கொடை உள்ளமும் பெரும் பங்கு வகித்தன.

அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு புரட்சித் தலைவரின் இரக்க சிந்தனை, பழகியதால் ஏற்பட்ட பரிதாபம், கெஞ்சி நிற்பவர்க்கு இல்லை என்று சொல்ல முடியாத தெய்வ குணம் காரணமாக ஒரு தீய சக்தி அண்ணாவின் இயக்கத்தைக் கைப்பற்றியது; முதலமைச்சர் பதவிக்கும் வந்தது. அந்தத் தீய சக்தி எத்தகைய தீய குணங்கள் நிறைந்தது என்பதை அதனுடைய செயல்களே உலகிற்கு உணர்த்தும் நிலையையும், `விதைத்ததை அறுக்காமல் விளையாட்டு முடிவதில்லை' என்ற அடிப்படை பௌதீக உண்மையையும் வெளிக் காட்டும் வகையில், இன்று அந்தத் தீய சக்தி அரசியல் சதுரங்கத்தில் தப்பிக்க வழியில்லாமல் மாட்டிக் கொண்டிருப்பதை உலகமே பார்த்து பரிதாபத்தோடு சிரிக்கிறது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மேற்கொண்ட பெரு முயற்சியின் காரணமாக

தீய சக்தியின் பிடியில் இருந்து அண்ணாவின் இயக்கம் காப்பாற்றப்பட்டது. தமிழ் மக்களின் உயர்வுக்காகவும், தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் உருவான திராவிட இயக்கம் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற தன்னலமற்ற மாபெரும் மக்கள் இயக்கமாக நாட்டு மக்கள் நெஞ்சில் இடம் பெற்றிருக்கிறது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் அறிவு, ஆற்றல், உழைப்பு, மனிதாபிமானம், ஜனநாயகப் பண்பு, சமூக நீதிக்கான வேட்கை ஆகியவற்றின் மீது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் வழியில் நடைபோடும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நான், பேரறிஞர் அண்ணா அவர்களின் பன்முக ஆற்றலைக் கண்டு பெரிதும் வியந்திருக்கிறேன்.

தமிழ் நாட்டிற்கு சில காலம் மட்டுமே முதலமைச்சராகப் பணியாற்றிய போதும், பேரறிஞர் அண்ணா அவர்கள் அந்தக் குறுகிய காலத்தில் மக்களுக்கு செய்திட்ட சாதனைகளை எனக்கு ஏற்ற வழிகாட்டும் நெறிகளாகக் கொள்கிறேன்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கை விளக்கப் பேரிகையாக விளங்கியது `காஞ்சி' என்னும் இதழ். அந்த இதழின் வளர்ச்சிக்கென நிதி திரட்ட எனது `காவிரி தந்த கலைச்செல்வி' நாட்டிய நாடக நிகழ்ச்சியை நடத்தினேன். இந்த நிகழ்ச்சிக்கும், பின்னர் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் நடைபெற்ற எனது `காவிரி தந்த கலைச்செல்வி' நாட்டிய நிகழ்ச்சிக்கும்

அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை ஏற்று நிகழ்ச்சியை முழுமையாகக் கண்டு களித்ததோடு, என்னைப் பற்றி மிகுந்த அன்புடன் பாராட்டி உரையாற்றினார். அந்த இரண்டு உரைகளிலும் என்னைப் பற்றியும், நாட்டிய நிகழ்ச்சியின் தரம் பற்றியும் பல்கலை மேதையான பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறிய புகழுரைகளை இன்றும் பசுமையாக நினைவில் கொண்டிருக்கிறேன்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நல்லாசியோடு, உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் நடத்தி வரும் ஆட்சி, அண்ணா வழியிலான ஆட்சி. மக்கள் அனைவரும் அனைத்து நலன்களும், வளங்களும் பெற்று எந்நாளும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்பதற்காக என்னுடைய அரசு எண்ணற்ற மக்கள் நலப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வருகிறது.

சட்டமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் மற்றும் பல்வேறு இடைத் தேர்தல்களிலும் தமிழக மக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அளித்து வரும் பேராதரவு, என்னுடைய ஆட்சிக்கு அளிக்கப்படும் நற்சான்றாக விளங்குகிறது. மக்களின் இந்த அன்பும், ஆதரவும் எந்நாளும் தொடர பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை மனதில் ஏற்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் மக்கள் தொண்டில் முழு மனதோடு பாடுபட, பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான இப் பொன்னாளில் சூளுரை ஏற்போம்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் நம் இயக்கத்தின் உயிர் மூச்சு; தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்கென வாழ்ந்த மாபெரும் தலைவர்; என்றென்றைக்கும் நம் அனைவரது நன்றிக்கும், வணக்கத்திற்கும் உரியவர்.

இத்தகைய போற்றுதலுக்கும், சிறப்புக்கும் உரிய நம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான 15.9.2014 அன்று ஆங்காங்கே நிறுவப்பட்டிருக்கும் அண்ணா அவர்களுடைய திருவுருவச் சிலைகளுக்கும், வழக்கம் போல கழக உடன்பிறப்புகள் தங்கள் பகுதிகளில் நிறுவ இருக்கும் பேரறிஞர் அண்ணா அவர்களின் படங்களுக்கும் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாகக் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அன்புச் சகோதரி.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தான் வரைந்துள்ள மடலில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்