முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் பிறந்த நாளில் ஏழைகளுக்கும், மாணவர்களுக்கும் உதவி செய்யுங்கள்: சரத்குமார்

வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2015      சினிமா
Image Unavailable

சென்னை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஜூலை 14-ந்தேதி என்னுடைய பிறந்தநாள் விழாவிற்காக நேரில் சந்தித்து வாழ்த்தவும், வாழ்த்துப் பெறவும் நேரில் சென்னைக்கு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிற சகோதரர்கள் வருகிற ஜூலை 14-ந்தேதி தயவு செய்து சென்னைக்கு நேரில் வருவதைத் தவிர்த்திட வேண்டுகிறேன்.
அதே சமயம் சென்னைக்கு வரும் செலவையெல்லாம் சேர்த்து தங்கள் பகுதியில் உள்ள ஏழை, எளியோர்க்கு தேவையான உதவிகளையும், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவிகளையும் செய்திட வேண்டுகிறேன்.

வீட்டுக்கொரு விவசாயி உருவாக வேண்டும், விவசாயம் லாபமுள்ள தொழிலாக மாற்றப்பட வேண்டும். சிறுதொழில் வளர்ச்சி காண வேண்டும், ஊருக்கொரு தொழிற்சாலை உருவாக வேண்டும், அனைத்துக் கல்வியும் இலவசமாக்கப்பட வேண்டும், வேலை இல்லாத் திண்டாட்டம் குறைக்கப்பட வேண்டும், வேலை வாய்ப்புகளுக்கு உரிய கல்வியை உருவாக்க வேண்டும். அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும்,

ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்பட வேண்டும், இறக்குமதி குறைந்து ஏற்றுமதி வளர்ந்திட வேண்டும், தமிழ்மொழியைக் காக்க உயிரைக் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். அனைத்து மொழிகளையும் ஆர்வத்தோடு கற்றிட வேண்டும்.

குடியை மறக்க வேண்டும், குடும்பத்தை நினைக்க வேண்டும் உள்ளத்தை வளமாக்க உடலையும் காக்க வேண்டும். இதற்கான மாற்றத்தை நோக்கி செயல்பட இந்நாளில் உறுதியேற்போம் என்று என் பிறந்தநாள் செய்தியாக தெரிவித்து கொள்கிறேன்.

சென்னையில் உள்ள நண்பர்கள், பரிசுப் பொருட்கள், சால்வை, மாலைகளைத் தவிர்த்து, பிறந்த நாள் பரிசாக கட்சி வளர்ச்சி நிதியை பெருக்கிட வேண்டுகிறேன். ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சிறப்பாகக் கொண்டாடுவது என்றும், அதை ஒட்டி சென்னையிலுள்ள கல்லூரிகளுக்கிடையே உள்ள மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து