முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியக் குழுவினரின் 3 நாள் கள ஆய்வு முடிந்தது: விரைவில் அறிக்கை தாக்கல்

சனிக்கிழமை, 28 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழகத்தில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு நேற்று மூன்றாவது நாளாக பார்வையிட்டனர். வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வந்த ஆய்வுக்குழுவினர் அம்மா உணவகத்தில் உணவு உட்கொண்டனர். முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய நிலவேம்பு குடிநீர் வாங்கி அருந்தினர்.,

தமிழகத்தில் அண்மையில் கொட்டித் தீர்த்த வடகிழக்குப் பருவமழையால் கடலூர் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இம்மாவட்டங்களில், உடனடி நிவாரணப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு சேதங்களை விரைந்து சீரமைக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, இப்பணிகளுக்கென உடனடியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதன்படி, நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

அதனைத் தொடர்ந்து, பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஜெயலலிதா, வெள்ள சேதங்களை முழுமையாக சீரமைக்க, முதற்கட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் 8,481 கோடி ரூபாய் தேவை என்றும், உடனடியாக 2 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில், தமிழகத்திற்கு, முதற்கட்டமாக 939 கோடியே 63 லட்சம் ரூபாயை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

மேலும், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தபடி, வெள்ளச்சேத பகுதிகளைப் பார்வையிட, தமிழகத்திற்கு மத்தியக்குழு , கடந்த 26 ம்தேதி வந்தனர். . உள்துறை இணைச் செயலாளர் டி,வி.எஸ்.என். பிரசாத் தலைமையிலான 9 பேர் கொண்ட ஆய்வுக்குழு, சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து. ஆலோசனை நடத்தினர். வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டு, மத்திய அரசு உடனடியாக நிதியுதவி வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்தியக் குழுவை முதலமைச்சர் ஜெயலலிதா, கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக கடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளச் சேத பகுதிகளை மத்தியக் குழு, பார்வையிட்டார். மூன்றாவது நாளான நேற்று திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வடசென்னை பகுதிகளில் மத்திய குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. வடசென்னை தண்டையார்பேட்டை பகுதியில் சேணியம்மன் கோயில் தெரு தொடக்கப்பள்ளி நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்து , மழை வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தது. நிவாரண முகாமில் தங்கி இருந்த பொது மக்களையும் மத்திய குழுவினர் சந்தித்து பேசினார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் நிவாரண உதவிகள் பற்றி கேட்டறிந்தனர்.

நிவாரண முகாமில் தங்கி இருந்த மாரியம்மாள் மத்திய குழுவினரிடம் கூறுகையில், கைலாச முதலி தெருவில் குடியிருக்கிறோம். அங்கு வெள்ளம் புகுந்ததால் பள்ளியில் தங்க வைக்கப்பட்டோம். முதல்–அமைச்சர் வந்து எங்களை பார்த்தார். அதிகாரிகளும் தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்தனர். இப்போது பள்ளிகள் திறக்கப்பட்டதால் நாங்கள் வீடு திரும்பினோம். இனி மழை காலங்களில் வெள்ளம் தேங்காதவாறு வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்றார்.

இதுபோல் அங்கு தங்கி இருந்த பல பெண்களும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். நிவாரண முகாமில் செயல்படும் மருத்துவ முகாமையும் மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இளைய முதலி தெருவை பார்வையிட்டனர். அங்கு ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த கழிவுநீர் லாரியை பார்த்ததும் அதன் செயல்பாடுகளை சிறிது நேரம் நின்று பார்வையிட்டனர். வ.உ.சி. நகர் சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமிற்கும் சென்று பார்வையிட்டனர்.

மழை வெள்ள நீர் அகற்றம் - அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த புகைப்படங்களை மத்தியக்குழு பார்வையிட்டது. மேலும், தண்டையார்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்ட மத்தியக் குழு, உணவு தயாரிப்பு முறைகளைக் கேட்டறிந்தது. அங்கு வழங்கப்பட்டு வரும் நிலவேம்பு குடிநீரை மத்தியக்குழுவினர் ஆர்வத்துடன் வாங்கி அருந்தினர்.

அதனைத் தொடர்ந்து, கைலாசன் தெரு, இளைய தெரு உள்ளிட்ட இடங்களில் வெள்ளச் சேதங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர், அங்குள்ள மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். அங்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி அமைக்கப்பட்டிருந்த நடமாடும் மருத்துவ முகாமில் அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

இதன்பின்னர் மத்தியக் குழு, கார்கில் நகர், சடையான் குப்பம், தட்டாமாஞ்சில் ஆகிய பகுதிகளை பார்வையிட்டது. அப்போது நிருபர்களிடம் பேசிய மத்திய குழுத் தலைவர் பிரசாத், தங்களது ஆய்வறிக்கையை ஒரே வாரத்தில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்