முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இப்சா உச்சி மாநாட்டில் பங்கேற்க மன்மோகன் இன்று பிரிடோரியா பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, அக்.- 17 - இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகளைக் கொண்ட இப்சா  உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக  பிரதமர் மன்மோகன் சிங் இன்று பிரிடோரியா பயணமாகிறார். இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகளும் சேர்ந்து  இப்சா என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த இப்சா அமைப்பின் 5-வது உச்சி மாநாடு வருகிற 18-ம் தேதி பிரிடோரியாவில் நடைபெற உள்ளது.  இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று ( 17 ம் தேதி ) டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் பிரிடோரியா புறப்பட்டு செல்கிறார்.  மூன்று நாள் பயணமாக பிரிடோரியா செல்லும் மன்மோகன் சிங் பிரேசில் ஜனாதிபதி தில்மா ரூசப், தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி  ஜேக்கப் ஜூமா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்துவார். இவர்களின் இந்த உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இந்த 3 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலும்  பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன. இந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் உச்சி மாநாட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும். உலகத்தில் தற்போதுள்ள பொருளாதார  மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்து இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் பாதுகாப்பு ஸ்திரத்தன்மை குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் கூறியுள்ளன. ஐ.நா. சபை கொண்டுவந்துள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குறித்தும்  மாநாட்டில் விவாதிக்கப்படும். அடுத்த மாதம் பாரிஸ் நகரில் ஜி. 20 உச்சி மாநாடு  நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிலும் இந்த 3 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். அந்த மாநாட்டில் தாங்கள் எடுத்து வைக்க இருக்கும் கருத்துக்கள் குறித்து இப்சா மாநாட்டில் இவர்கள் விவாதிப்பார்கள்.

சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், கடல் கொள்ளையர்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள்  போன்ற அம்சங்கள் குறித்தும்  உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படும். இந்த உச்சி மாநாட்டின்போது இந்த 3 நாடுகளின் சார்பில் தூதரக அகாடமி ஒன்றை அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்திலும் இந்த 3 தலைவர்களும் கையெழுத்திடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்