முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2019 பாராளுமன்ற தேர்தலில் 70 பிரபலங்களுக்கு வாய்ப்பு: பாரதிய ஜனதா கட்சி திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற  தேர்தலில் திரையுலகம், விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சுகாதாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 70 பிரபலங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவதற்கு பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: திரைப்படத் துறை, விளையாட்டுத் துறை,கலை மற்றும் பண்பாட்டுத் துறை, ஊடகத் துறை, சுகாதாரத் துறை போன்ற துறைகளைச் சேர்ந்த பலர் தங்களது துறைகளில் பல சாதனைகளை நிகழ்த்தி, மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளனர். இதனால், அவர்களுக்கு பல ஆதரவாளர்களும், ரசிகர்களும் உள்ளனர். அவர்களால் கூட்டத்தை திரட்ட முடியும். மேலும், அவர்களால் அரசியலில் மாறுபட்ட சிந்தனைகளையும், தொலைநோக்கு பார்வையையும் அளிக்க முடியும் என்று பா.ஜ.க. மேலிடம் நம்புகிறது.

அதன்படி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு திரைப்பட நடிகர்கள் அக்ஷய் குமார், சன்னி தியோல், மோகன் லால், மாதுரி தீட்சித், கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்லி தொகுதியில் அக்ஷய் குமார், குருதாஸ்பூர் தொகுதியில் சன்னி தியோல், மும்பையில் மாதுரி தீட்சித், திருவனந்தபுரத்தில் மோகன்லால் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

பொது வாழ்வில் சாதனைகளை நிகழ்த்தியவர்களை பா.ஜ.க.வுக்குள் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். அவரது உத்தரவுப்படி, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கட்சிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க.வைச் சேர்ந்த பெரும்பாலான எம்.பி.க்களுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். எனவே, அவர்களுக்கு மாற்றாக புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். இவ்வாறு புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்குவதால், கட்சி எம்.பி.க்கள் பலருக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்று அந்த பா.ஜ.க. மூத்த தலைவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து