முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுக்கடுக்கான மின் உற்பத்தி திட்டங்கள்: அமைச்சர் வெளியிட்டார்

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 22 - வருங்காலத்தில் மின் தேவை– மின் வழங்கலை கருத்தில் கொண்டு முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்உற்பத்தி திட்டங்கள் பட்டியலை மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் சட்டசபையில் நேற்று வெளியிட்டார்.

ரூ.5,000 கோடியில் எண்ணூர் அனல் மின் திட்டம் விரிவாக்கம்; ரூ.8,391 கோடியில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் அனல் திட்டம்; ரூ.10,121 கோடியில் உடன்குடி அனல்மின்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும்.

எரிசக்தி துறை குறித்த கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் சட்டசபையில் நேற்று

தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

2014–2015–ம் ஆண்டில்

மின் உற்பத்தி திட்டங்கள்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அதிகரித்து வரும் மின்தேவையை நிறைவேற்ற கீழ்க்கண்ட மின் திட்டங்களை இயக்கத்திற்கு கொண்டு வர போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

500 மெகாவாட் திறன் கொண்ட தமிழ்நாடு மின்சார வாரியம்–தேசிய அனல் மின் கழகத்தின் கூட்டு முயற்சி திட்டத்தில் உள்ள மூன்றாம் அலகு 28.2.2014 அன்று மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், ஆகஸ்ட் 2014–ல் வணிக ரீதியான மின் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அலகிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் பங்கு 350 மெகாவாட் ஆகும்.

தூத்துக்குடியில் நிறுவப்பட்டு வரும் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட தமிழ்நாடு மின்சார வாரியம்–நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கூட்டு முயற்சி திட்டத்தின் இரு அலகுகளும், அக்டோபர் 2014 மற்றும் மார்ச் 2015–ல் வணிக ரீதியான மின் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் பங்கு 387 மெகாவாட் ஆகும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகு 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனை 7.6.2014 அன்று எட்டியுள்ளது. இந்த அலகிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கு432 மெகாவாட் ஆகும். மேலும் முதலமைச்சரின் பெருமுயற்சியின் பலனாக, மைய அரசின் ஒதுக்கப்படாத பங்கிலிருந்து 100 மெகாவாட் இத்திட்டத்திலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1000 மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2–ம் அலகு இந்த ஆண்டு இறுதியில் மின் உற்பத்தியை தொடங்கும். இதில் தமிழகத்தின் பங்கு 463 மெகாவாட்ஆகும்.

மேலும் 2014–15–ம் ஆண்டில் தலா 250 மெகாவாட் திறன் கொண்ட பழுப்பு நிலக்கரி அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் நிலை–2ன் இரு அலகுகளும் மின் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கு 230 மெகாவாட் ஆகும்.

பெரியார் புனல் மின் நிலையத்தின் முதல் மூன்று அலகுகளிலும் புதுமைப்படுத்துதல், நவீனமயமாக்குதல் மற்றும் மின் நிறுவுத்திறன் உயர்த்தும் பணிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன. இந்த மின் நிலையத்தின் நான்காவது அலகிலும் இந்த பணிகள் இந்த வருடத்தில் முடிவடையும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் இந்த அலகின் மின் நிறுவு திறன் 35 மெகாவாட்டிலிருந்து 42 மெகாவாட்டாக உயர்த்தப்படும்.

2014–15–ம் ஆண்டில் ஏறத்தாழ 2000 மெகாவாட் கூடுதலாக மின் உற்பத்தி திறன் தமிழக மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட உள்ளது.

மின் கொள்முதல்

500 மெகாவாட் மின்சாரம் குறுகிய கால கொள்முதல் அடிப்படையில் ஜூன் 2013 முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நீண்ட கால அடிப்படையில் 2014–15–ம் ஆண்டில் இருந்து 15 வருடங்களுக்கு 3,330 மெகாவாட் மின் கொள்முதல் செய்ய தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த 3300 மெகாவாட் மின்சாரத்தில் 224 மெகாவாட் மின்சாரம் தற்போது கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 1500 மெகாவாட் மின்சாரம் ஆகஸ்ட் 2014 முதல் கொள்முதல் செய்யப்பட உள்ளது. மீதமுள்ள மின்சாரம் 2015–16–ம் ஆண்டு முதல் கொள்முதல் செய்யப்படும்.எண்ணூர் அனல் மின் திட்டத்தின் மதிப்பீடு 5000 கோடி ஆகும். இத்திட்டம் 2017–ல் செயல்பட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணூர் சிறப்பு பொருளதார மண்டலம் அனல் மின் திட்டம் (2X660): இத்திட்டத்தில் இரு அலகுகள் உள்ளன. ஒவ்வொரு அலகும் 660 மெகாவாட் மின் நிறுவு திறன் கொண்டது. இத்திட்டம் மிக உய்ய அனல் மின் தொழில்நுட்பத்தில் துவக்கப்படவிருக்கிறது. இத்திட்டம் ரூ.8,391 கோடி முதலீட்டில் அமைய உள்ளது. இத்திட்டம் 2018–19–ல் செயல்பாட்டிற்கு வரும்.

உடன்குடி அனல்மின் திட்டம்

இத்திட்டம் நிலக்கரியைப் பெறும் இறக்கு தளத்துடன் சேர்த்து ரூ. 10,121 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது.

உப்பூர் அனல் மின்திட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை தாலூகாவில் உப்பூர் கிராமத்தில் இந்த திட்டத்திற்கான அடம் உள்ளது. இத்திட்டம் ரூ. 9,600 கோடி முதலீட்டில் அமைய உள்ளது. இத்திட்டம் 2019–20–ம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும்.

வடசென்னை அனல்மின் திட்டம் ரூ.4800 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது. 800 மெகாவாட் நிறுவு திறன் கொண்ட இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெற பல்வேறு ஆய்வுப் பணிகள் நிறைவு பெற்றள்ளன.

எண்ணூர் மாற்று அனல் மின்திட்டம் ரூ.3,960 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது. தமிழக அரசு எண்ணூர் அனல் மின் நிலையத்தில் உள்ள பழைய 5 அலகுகளுக்கு (450 மெகாவாட்) பதிலாக ஒரு புதிய 660 மெகாவாட் திறன் கொண்ட மிக உள்ள அனல்மின் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு முன்சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்யப்பட்டு திட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இத்திட்டம் 2019–20–ல் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடன்குடி விரிவாக்கத் திட்டம் ரூ.7,660 கோடி முதலீட்டில் அமைய உள்ளது. முன்சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்பட்டு திட்ட ஆயத்தப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

உடன்குடி மின்திட்ட நிலை–3 (2X660), தூத்துக்குடி மாற்று அனல் மின் திட்டம்–4 (1X800) ஆகும். தலா 600 மெகாவாட் திறன் கொண்ட இரு அலகுகள் இத்திட்டத்தில் அமையவுள்ளது.

செய்யூர் மிக உய்ய அனல்மின் திட்டம் ரூ.25,970 கோடி முதலீட்டில் அமைய உள்ளது. இத்திட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு 1600 மெகாவாட் ஆகும். இத்திட்டத்திற்கு தமிழக அரசால் 1,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் உள்ள சுரங்க வளாக அனல் மின் நிலையம் (4000 மெகாவாட்): சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு நிலக்கரிப் பகுதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கும் மகராஷ்டிரா மாநில சுரங்க நிறுவனத்திற்கும் சேர்ந்து ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சுமார் 4000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை சுரங்க வளாக அருகாமையில் அமைக்க உள்ளது. இத்திட்டத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு 2500 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கும். சுரங்கத்தை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நீலகிரி மாவட்டம் குந்தா நீரேற்று மின்திட்டத்திற்கு அணுகு சுரங்கப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

சில்லஹல்லா மற்றும் எமரால்டு அணைகளை இணைக்கும் அணுகு சுரங்கம் நிறுவுதல், இதன்மூலம் ஏற்கனவே உள்ள குந்தா மின் நிலையங்களில் கூடுதலாக மின் உற்பத்தி செய்ய முடியும்.

சில்லஹல்ல நீர்த்தேக்கத்திலிருந்து தலைவாயில் சுரங்கம், உயரழுத்த குழாய் மற்றும் கடைவாயில் சுரங்கம் மற்றும் பூமிக்கு அடியில் நிறுவப்படவுள்ள தலா 500 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் அமைத்தல், அணுகு சுரங்கம் மற்றும் மின்சார வழித்தடங்கள் அமைத்தல் மேற்படி திட்டத்திற்கு தேவையான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

2013–14–ம் ஆண்டில் 58.6 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது.

தற்போதுள்ள அனல் மின் நிலையங்கள் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாக இருந்தபோதிலும் அவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அனைத்திந்திய அளவிலான சராசரி உற்பத்தி திறன் 65.55% என்ற அளவில் உள்ள போது தூத்துக்குடி, மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்கள் 2013–14–ம் ஆண்டில் முறையே 85.8%, 88.04% மற்றும் 74.33% உற்பத்தி திறனை எட்டியுள்ளன.

ஜப்பானிய கூட்டுறவு

நிறுவன நிதி உதவி

ஐந்து 400 கிலோவோல்ட் துணை நிலையங்களும், பதினான்கு 230 கிலோவோல்ட் துணை மின் நிலையங்களும் மற்றும் இந்த துணை மின் நிலையங்களுக்கான மின்பாதை அமைப்புகள் ஆகியவற்றை ஐந்து ஆண்டுகளில் அமைப்பதற்காக ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்திடமிருந்து ரூ.3,572.93 கோடி நிதியுதவி பெற ஒப்பந்தம் கையெழுத்தாகி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. மேற்குறிப்பிட்டுள்ள ஐந்து 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களில், சோழிங்கநல்லூர் துணை மின் நிலையம் அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. காரமடை துணை மின் நிலையத்திற்கு ஒப்பந்தப்புள்ளி முடிவு செய்யப்பட்டு பணி ஆணை மற்றும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மணலி துணை மின் நிலையத்திற்கு ஒப்பந்தப்புள்ளிகள் ஆய்வில் உள்ளன.கொரட்டூர் மற்றும் கிண்டி துணை மின் நிலையங்களுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படவுள்ளன. மேற்குறிப்பிடப்பட்டுள்ள பதினான்கு 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களில் ஆலந்தூர் மற்றும் அம்பத்தூர் 3–வது பிரதான சாலை துணை மின் நிலையங்களுக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. கிண்ணிமங்கலம், ராஜா அண்ணாமலைபுரம், கும்பகோணம், பொய்யூர், கருவலூர் மற்றும் சென்ட்ரல் துணை மின் நிலையங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி முடிவு செய்யப்பட்டு பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புரிசை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமையகம், காஞ்சிபுரம், சவசபுரம், செண்பகபுதூர் மற்றும் திருப்பூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டு ஆய்வில் உள்ளன.

கூடுதல் மின் தொடரமைப்பு திட்டங்கள்; காற்று மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக சுமார் ரூ.1600 கோடி செலவில் கூடுதல் மின் தொடரமைப்பு திட்டங்கள் தேசிய பசுமை எரிசக்தி நிதி உதவியாக ரூ.637.2 கோடி (40 விழுக்காடுகள்) மற்றும் ஜெர்மன் நாட்டு நிதி உதவியாக 40 விழுக்காடுகள் மென் கடனாகவும் மீதமுள்ள 20 விழுக்காடுகள் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் சுயநிதியிலிருந்து பங்கு மூலதனமாகவும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து 31–3–2014 வரை 29.81 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மின் பகிர்மான கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த 15,000 கிலோ மீட்டர் அளவிலான உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகள் அமைக்க இந்த 2014–15–ம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டில் 120 துணை மின் நிலைய மின்மாற்றிகள் நிறுவுத்திறன் உயர்த்தவும் கூடுதல் நிறுவுத்திறனை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஊரக மின்மயமாக்கல் திட்டம் 26 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, திருநெல்வேலி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ரூ.37.27 கோடிக்கு இத்திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சரின் சூரியசக்தி பசுமை வீடுகள் திட்டம்: சூரிய மேற்கூரை மின் உற்பத்தி தகடுகளை சுய உபயோகத்திற்காக நிறுவும் இத்திட்டம் இந்தியாவிலேயே மிகப்பெரிய திட்டமாகும். மேற்கூரையில் சூரிய மின் தகடுகளை அமைத்து குடியிருப்போரின் மின்தேவைகளை பூர்த்தி செய்ய ஆண்டுதோறும் 60,000 பசுமை வீடுகள் இத்திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வருகின்றன. சூரிய மின் தகடு வீட்டிலுள்ள ஐந்து விளக்குகள் கொண்ட தொகுப்பினை மின்னூட்டப் பயன்படுகின்றன.

சூரிய மின்சக்தி தெருவிளக்குகள்: 2011–12ல் தொடங்கப்பட்ட கிராமப்புறங்களுக்கான சூரிய சக்தி தெரு விளக்குத் திட்டம் 1,00,000 தெருவிளக்குகளை சூரிய சக்தியால் இயங்கும் எரிசக்தி சிக்கன விளக்குகளாக மாற்ற உதவுகிறது. இத்திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் தற்போதுள்ள 20,000 தெருவிளக்கு அமைப்புகள் எரிசக்தி சிக்கன 20 வாட் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த விளக்குகள் சூரியசக்தி மூலம் மின்னூட்டப்படுவதால் உள்ளாட்சி அமைப்புகள் மின் கட்டணத்தில் கணிசமான அளவு சேமிக்க வழிவகை ஏதுவாகிறது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளில் சூரிய ஒளி மின் நிலையங்கள் நிறுவுதல்; இதுவரை 69 விடுதிகளில் சூரிய தகடுகள் நிறுவப்பட்டு தற்போதுள்ள மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகள் எரிசக்தி சிக்கன மின்விசிறிகள் மற்றும் குழல் விளக்குகளாக மாற்றும் பணி நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 34 விடுதிகளில் சூரிய மின் தகடுகள் நிறுவும் பணி விரைவில் நிறைவு பெற உள்ளது.

ரூ.20,000 ஊக்கத்தொகை

முதலமைச்சரின் சூரிய மேற்கூரை ஊக்கத்தொகைத் திட்டத்தின்கீழ் ஒரு கி.வா. மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட மின்கலன் அற்ற சூரிய மேற்கூரை மின் நிலையம் அமைக்கும் வீட்டு உபயோக நுகர்வோர்களுக்கு ரூ.20,000 மூலதன ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்