முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக எதிர்க்கட்சிகள் உட்பட பலதரப்பினர் குற்றச்சாட்டு முன்வைத்துவந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது விவிபாட் ஒப்புகை சீட்டுகளையும் 100 சதவிகிதம் சரிபார்க்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, ``இந்தியாவின் மக்கள்தொகை அதிகம். இப்போது வாக்குச் சீட்டு நடைமுறை என்பது சாத்தியமற்றது. தொழில்நுட்ப ரீதியாகத் தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு அமைப்பை கண்மூடித்தனமாக நம்பாமலிருப்பது தேவையில்லாத சந்தேகங்களுக்கு வழிவகுக்கும். அரசியலமைப்பின் ஒரு அதிகார அமைப்பான தேர்தல் ஆணையத்தின் மீது நாங்கள் அதிகாரம் செலுத்த முடியாது. எனவே தேர்தல்களை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். எனவே, இந்த வழக்கின் கோரிக்கையை நடைமுறையில் உள்ள நெறிமுறை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பதிவில் உள்ள தரவுகளின் அடிப்படையில் நிராகரிக்கிறோம்" எனத் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு தொடர்பாக பீகார் மாநிலம் அராரியாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ``நமது ஜனநாயகத்திற்கு மங்களகரமான நாள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட் பலமாக அறைந்துள்ளது. நமது ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைமுறையை உலகமே போற்றிக்கொண்டிருக்கும்போது, எதிர்க்கட்சிகள் தங்களது தனிப்பட்ட நலன்களுக்காக அதையே அவதூறாகப் பேசுகின்றன.

அதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகியோரின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் சதி செய்திருக்கிறது. இதை நான் மிகுந்த பொறுப்புடன் தெரிவிக்கிறேன். ஏனென்றால், அம்பேத்கர், இந்தியாவில் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு இருக்க முடியாது என்று மிகத் தெளிவான வார்த்தைகளில் கூறியிருக்கிறார். ஆனால் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த காங்கிரஸ் தன்னால் இயன்றவரை முயற்சி செய்து வருகிறது. கர்நாடகாவில் அமல்படுத்தியதைப் போல இட ஒதுக்கீட்டை நாடுமுழுவதும் அமல்படுத்த முயற்சிக்கிறது.

காங்கிரஸ் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டனர். கர்நாடகாவின் அனைத்து முஸ்லிம்களையும் அவர்களின் நிதி நிலையைப் பொருட்படுத்தாமல் ஓபிசி பட்டியலில் சேர்த்துள்ளனர். பல ஆண்டுகளாக மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. வாக்களிக்க மக்களை வெளியே கூட விடவில்லை. ஆனால் இப்போது, ஏழை மற்றும் நேர்மையான வாக்காளர்களுக்கு இ.வி.எம்.-ன் பலம் இருக்கும்போது, எதிர்க்கட்சிகள் அதை நீக்க தங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சிக்கின்றனர்." எனத் தெரிவித்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து