முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நட்வர்சிங்கின் கருத்து காயப்படுத்தி விடாது: சோனியா

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.1 - முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்துள்ள கருத்துக்களும் தகவல்ளும் என்னை காயப்படுத்தி விடாது என்றும் சோனி்யா காந்தி பதில் அளித்துள்ளார்.என் சுயசரிதை வெளியாகும் போது நட்வர் சிங் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நிரூபிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

2004-ம் ஆண்டில் சோனியா காந்தியை பிரதமராக விடாமல் தடுத்தது ராகுல் காந்திதான். சோனியா காந்தி சொந்த விருப்பத்தின் பேரில் பிரதமர் பதவியை துறக்கவில்லை என்று முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தார்.

அந்தப் பேட்டியில் சோனியா பிரதமராவதை ராகுல் காந்தி விரும்பவில்லை. தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி ஆகியோருக்கு ஏற்பட்டதுபோல துயரமான முடிவு தனது அம்மா சோனியாவுக்கும் ஏற்பட்டு விடும் என்ற அச்சம்தான் ராகுலின் எதிர்ப்புக்கு காரணம்.

இதனை அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார். ஒரு மகனாக சோனியா பிரதமராவதை நான் விரும்பவில்லை என்றும் ராகுல் கூறினார். இதனால்தான் சோனியா பிரதமர் பதவியை ஏற்கவில்லை. சோனியா எப்போதும் ஒரு சர்வாதிகாரி போலவே செயல்பட்டார் எனவும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சோனியா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "என் சுயசரிதையை நான் எழுதுவேன். அப்போது அனைவருக்கும் உண்மை தெரிய வரும். என் சுயசரிதையை எழுதுவதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன்.

நட்வர் சிங்கின் கருத்துகள் என்னை ஒன்றும் காயப்படுத்திவிடாது. நான், என் மாமியார் குண்டுகள் துளைக்கப்பட்டு இறந்ததையும், என் கணவர் குண்டுவெடிப்பில் இறந்ததையும் பார்த்திருக்கிறேன். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை தொடர்ந்து செய்யட்டும். எனக்கு கவலை இல்லை" என கூறியுள்ளார்.

2004- 05 காலகட்டத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த நட்வர் சிங் இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

எண்ணெய்க்கு உணவு திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து வோல்கர் அறிக்கை வெளியான பிறகு, நட்வர் சிங் அவரது பதவியை துறக்கும் நிர்பந்தம் ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்