முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளின் கடன் ரூ.36,359 கோடி தள்ளுபடி: உத்தரப்பிரதேச அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி  - உத்தர பிரதேசம் மாநிலத்தில் விவசாயிகளின் பயிர் கடன் மற்றும் வாராக்கடன் தொகையான 36,359 கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ள யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதிரடி அறிவிப்புகள்
உத்தர பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.யோகி ஆதித்யநாத் தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், வளர்ச்சித் திட்டப் பணிகள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

பயிர்க்கடன்கள் தள்ளுபடி
குறிப்பாக விவசாயிகளின் ரூ.1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை அனுமதிப்பதில்லை என்றும், இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

வாராக்கடன் தள்ளுபடி
2.15 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.30 ஆயிரத்து 729 கோடி தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டது. மேலும், விவசாயிகளின் வாராக்கடன் ரூ.5630 கோடியையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள மொத்தம் உள்ள 2.30 கோடி விவசாயிகளில், 92.5 சதவீதம் அதாவது 2.15 கோடி பேர் சிறு மற்றும் குறு விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் வரவேற்பு
இந்நிலையில், விவசாயிகளின் கடன் 36 ஆயிரத்து 359 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சியடைகிறேன்
இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் நேற்று அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில், ‘விவசாயிகளுக்கு உ.பி. அரசு செய்துள்ள இந்த சலுகை சிறு பகுதியிலான நிவாரணம்தான் என்றாலும் சரியான பாதையை செல்லும் ஒரு முடிவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சிறு, குறு விவசாயிகளின் கடன் தொகை 36,359 கோடியை தள்ளுபடி செய்ததன் மூலம் விவசாயிகளின் மூலாதார பிரச்சனையை அறிந்துகொள்ள பா.ஜ.க. அரசு முன்வந்துள்ளதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு ....
‘ஆனால், நாடு முழுவதும் அவதிப்படும் விவசாயிகளுடன் நாம் அரசியல் விளையாட்டில் ஈடுபட கூடாது. மாநிலங்களுக்கு இடையில் பாரபட்சம் காட்டாமல் பரவலாக நாடு முழுவதும் பேரிடருக்குள்ளாகி இருக்கும் விவசாயிகளிடம் பிரச்சனைகளை தீர்க்க பரவலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்