முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை சென்னை தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன் வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      சென்னை
Image Unavailable

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று சென்னை மாநகராட்சி கமிஷனரும், சென்னை தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன் வெளியிட்டார். 16 தொகுதிகளின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 40 லட்சத்து 73 ஆயிரத்து 703 பேர். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 13 ஆயிரத்து 168 ஆகும். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 59 ஆயிரத்து 557 ஆகும்.

 இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயன் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயன், இன்று (3–ந் தேதி) ரிப்பன் மாளிகை, கூட்டரங்கில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் 1.1.2018-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 2018–ம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4,5,6,8,9,10,13 மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விபரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா அல்லது இல்லையா என்பது குறித்து சரிபார்த்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.31–ந் தேதிக்குள் விண்ணப்பம் மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2018 அன்று 18 வயது நிறைவு அடைகின்றவர்கள் (1.1.1999–ம் தேதிக்கு முன்பிறந்தவர்கள்) படிவம் 6–ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7–ஐ பூர்த்தி செய்தும், பட்டியலில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும் அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 3.10.2017 முதல் 31.10.2017 முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.

2 நாள் சிறப்பு முகாம்கள்

மேலும் 8.10.2017 மற்றும் 22.10.2017 (ஞாயிற்றுக்கிழமைகளில்) ஆகிய நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அது சமயம் பொதுமக்கள் உரிய படிவங்களை பெறவும், பூர்த்தி செய்த படிவங்களை அளிக்கவும், இந்தச் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். (இணையதள முகவரி www.elections.tn.gov.in மற்றும் nvsp.in) விண்ணப்பங்களை வலைதளம் மூலமே மேற்கொள்ள வாக்காளர்கள் கோரப்படுகின்றனர். சென்னை மாவட்டத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது 3,699 வாக்குச்சாவடிகளும் 72 துணை வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. தற்சமயம் வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு சென்னை மாவட்டத்தில் 3,768 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, இன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் அதன் அடிப்படையில் வெளியிடப்படுகிறது, அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 287 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பெண் வாக்காளர்கள் அதிகம்

கடந்த 5.1.2017 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19,72,641 ஆகும். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 20,13,768 ஆகும். இதர வாக்காளர்களின் எண்ணிக்கை 959 ஆகும். சென்னை மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 39,87,359 ஆகும். நடைபெற்று முடிந்த தொடர் திருத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 16,081 ஆண் வாக்காளர்கள் மற்றும் 16,473 பெண் வாக்காளர்கள் மற்றும் 19 இதர வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் 8,701 ஆண் வாக்காளர்கள், 8,002 பெண் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.தற்போது வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலின்படி சென்னை மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை சட்டமன்றத்தொகுதி வாரியாக கீழ்கண்டவாறு உள்ளது.16 தொகுதிகளில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 40,73,703. குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1,89,102 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 3,07,616 வாக்காளர்களும் உள்ளனர்.ஜனநாயகத்தினை வலுப்படுத்த, தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியலினை பார்வையிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் ஆர்.லலிதா, வருவாய் அலுவலர் (தேர்தல்) முத்துகுமாரசாமி உட்பட பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து