முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் - துணை முதல்வர் குறித்து அவதூறு கருத்துகள்: குருமூர்த்தி கருத்துக்கு ஜெயகுமார் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் மற்றும் துணை முதல்வர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்த துக்ளக் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்திக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மேலும், அ.தி.மு.கவினர் பொங்கி எழுந்தால் என்ன ஆகும் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், அவர் தனது கருத்துகளை திரும்ப பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடும் வார்த்தை

பத்திரிகையாளரும் ஆடிட்டருமான குருமூர்த்தி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஆண்மையற்றவர்கள் என்று கடுமையான வார்த்தை பிரயோகங்களுடன் தன்னுடைய பதிவை வெளியிட்டிருந்தார். இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
ஏற்க முடியாது

இப்படியொரு கீழ்த்தரமான வார்த்தை பிரயோகத்திருப்பது ஜனநாயகத்தில் வெட்கி தலைக்குனிய வேண்டிய ஒன்றாகும். ஆடிட்டர், பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொள்பவர் இந்த வார்த்தையை பயன்படுத்தியிருப்பதை ஏற்க முடியாது. முதல்வர், துணை முதல்வர், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் யாராக இருந்தாலும் ஒன்றரை கோடி அ.தி.மு.கவினரும் ஜெயலலிதா எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர்கள். அவர்களின் வழியில் அ.தி.மு.கவை ஆண்மை வீரியத்தோடு, காங்கேயம் காளையை போன்று இந்த இயக்கத்தை கட்டிக்காத்து வருகிறார்கள். ஆண்மையில்லாதவர்கள் ஆண்மையை பற்றி பேசக்கூடாது என்றார்.

நாவடக்கம் தேவை

அப்போது நிருபர்கள், அ.தி.மு.கவின் இரு அணிகளையும் இணைக்க குருமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறதே என்று கேட்டபோது, அவர் யார், கிங்மேக்கரா என்று கேட்ட ஜெயகுமார், அளவுக்கு மிஞ்சி பேசும் அவர், அ.தி.மு.க பொங்கினால் என்ன நடக்கும் என்பதை அவர் புரிந்து கொண்டு பேச வேண்டும். நாவடக்கம் தேவை. நிதானத்தோடு பேச வேண்டும். நீங்கள் ஒன்று சொன்னால் நாங்கள் நூறு சொல்வோம். ஆண்மையோடு எதிர்க்கும் சக்தியை எங்கள் தலைவர்கள் எங்களுக்கு அளித்திருக்கிறார்கள்.

திரும்பபெற வேண்டும்

இந்த ஆட்சி சிறப்போடு நடந்து கொண்டிருக்கிறது. எந்த வகையிலாவது சூது செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையோடு இந்த வார்த்தையை அவர் பயன்படுத்தியிருக்கிறார். ஜெயலலிதா எம்.ஜி.ஆர் வகுத்த பாதையில் சென்று கொண்டிருக்கிற நாங்கள் அதை பொருட்படுத்தவில்லை. இதற்கு பா.ஜ.க பின்னணி இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். அவர் முதலில் பா.ஜ.க உறுப்பினரா ? இல்லையா ? என்பது எங்களுக்கு தெரியாது. ஒரு கருத்தை அவர் சொல்லி தொலைக்காட்சிகளில் வந்திருக்கிறது. எந்த காலக்கட்டத்திலும் நாங்கள் தன்மானத்தை இழக்கவில்லை. தன்மானத்திற்கு சோதனை வந்தால் அதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். தடித்த வார்த்தைகளை அவர் முதலில் திரும்ப பெற வேண்டும். இல்லையேல் அதற்குரிய விளைவுகளை அவர் அனுபவிக்க வேண்டும். எங்கள் தன்மானத்திற்கு சோதனை வந்தால் அதை ஒரு கை பார்த்து விடுவோம். எதற்கும் கவலைப்பட மாட்டோம்.

விடமாட்டோம்

படிக்காதவர்கள் கூட பண்பாளர்களாக இருப்பார்கள். ஆனால் அவர் படித்த முட்டாளாக இருப்பது தான் வேதனையளிக்கிறது. முதலில் அவருக்கு ஆண்மை இருக்கிறதா என்று அவர் சோதித்து கொள்ள வேண்டும். அவர் பயன்படுத்திய வார்த்தைகள் குறித்து நீதிமன்றத்தில் தேவை ஏற்பட்டால் வழக்கு தொடர்வது குறித்தும் பரிசீலனை செய்வோம் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். முதல்வர் - துணை முதல்வரை அவமதிப்பதை பொறுக்க மாட்டோம். முதல்வர் - துணை முதல்வர் மட்டுமல்ல, அ.தி.மு.கவின் சாதாரண தொண்டருக்கும் இழுக்கு ஏற்பட்டால் அதை ஏற்க மாட்டோம். இழிவுப்படுத்தியவர் யாராக இருந்தாலும் விடமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து