முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல நடிகை ஸ்ரீதேவி மறைவு: ஜனாதிபதி ராம்நாத் - பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ் திரைப்படம் மட்டும் அல்லாது இந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

80, 90-களில் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல், இந்தி திரைப்படங்களில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் திருமண விழாவில் பங்கேற்க குடும்பத்துடன் சென்றிருந்தார். அங்கு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

பிரதமர் இரங்கல்

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் நடிகை ஸ்ரீதேவி மறைவு வருத்தம் அளிக்கிறது.  திரைப்பட துறையில் மூத்த நடிகையான அவர், தனது நீண்ட கால திரை வாழ்க்கையில் பல்வேறு வேடங்கள் ஏற்றுள்ளதுடன், நினைவில் கொள்ள தக்க வகையிலான தனது நடிப்பினையும் வழங்கியுள்ளார். இந்த வேளையில் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் அவரது அன்புக்கு உரியவர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.  அவரது ஆன்மா அமைதியில் ஆழட்டும் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இரங்கல்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.  அவரது மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கவர்னர் புரோகித்

நடிகை ஸ்ரீதேவியின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது. பன்முகத்தன்மை கொண்ட அவர் தனது திறமை மற்றும் அறிவாற்றலாலும் திரை உலகில் கொடி கட்டி பறந்தார். தமிழகத்தின் மகளான அவர் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பெரும் புகழும், கவுரவமும் பெற்றார். அவரை இழந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதி அடைய கடவுளை பிரார்த்திக்கிறேன்.

முதல்வர் இரங்கல்

நடிகை ஸ்ரீதேவி மறைவு, தமிழ்த்திரையுலகிற்கு மட்டுமல்ல: இந்திய திரையுலகிற்கே பேரிழப்பு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுசம்பந்தமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

புகழ்பெற்ற திரைப்பட நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். திரைப்பட நடிகை ஸ்ரீதேவி சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்து, பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்த பெருமைக்குரியவர். நடிப்பில் பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தமிழில் நடித்த 16 வயதினிலே, மூன்றாம் பிறை, சிவப்பு ரோஜாக்கள், பிரியா, வறுமையின் நிறம் சிவப்பு போன்ற திரைப்படங்கள் இவரின் நடிப்புத் திறமைக்கு சான்றாகும்.

ஸ்ரீதேவி தனது நடிப்புத் திறமைக்காக பத்மஸ்ரீ விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் ஆவார்.

அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவரும், சுமார் 50 ஆண்டுகாலமாக திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவருமான நடிகை ஸ்ரீதேவியின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கே ஒரு பேரிழப்பாகும். ஸ்ரீதேவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

துணை முதல்வர் ...

நடிகை ஸ்ரீதேவியின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;- 

நடிகை ஸ்ரீதேவியின் அகால மரணம் துரதிருஷ்டவசமானது. பன்முகத்தன்மை, துடிப்பான நடிகையான இவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஒழுக்கமான வாழ்க்கையும் அனுபவமிக்க நடிப்புத் தொழிலும் தலைமுறைகளை கடந்து அனைவராலும் மெச்சிக்கப்படுகிறது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூலில் வெளியிட்ட பதிவில் :-

தமிழ் மற்றும் பிறமொழி திரைப்படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மறைவுச்செய்தி கேட்டு வேதனையடைந்தேன், அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் திமுக சார்பில் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து