முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரத யாத்திரையை தமிழகத்தில் மட்டும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் கேள்வி

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : ராமராஜ்ய ரதயாத்திரையை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் அனுமதித்து விட்டு தமிழகத்தில் எதிர்க்கலாமா என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டசபையில் ராமராஜ்ய யாத்திரை தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு ஒன்றை எழுப்பினார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அவரை பதிலளிக்காமல் தி.மு.க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதுவரை இல்லாத ...

இதற்கிடையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

பேரவைத் தலைவராகிய நீங்கள் மிகவும் கீழே இறங்கி, பணிவோடு எதிர்க்கட்சிகள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு வாதங்களையும் பொறுமையாகக் கேட்டு, அதற்குப் பிறகு உங்களுடைய தீர்ப்பை வழங்குகின்ற ஒரு நல்ல நடைமுறையை கடைப்பிடித்து வந்திருக்கின்றீர்கள். அதை எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் சரியாக புரிந்துகொள்ளவில்லையோ அல்லது புரிந்தும், புரியாமல் நடந்து கொண்டிருக்கின்றார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. மிகப் பெரிய, ஒரு தமிழக சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

மக்களை திசை திருப்பி...

அவர் இந்தப் பிரச்சனையை எடுத்துக்கொண்டு, பேச ஆரம்பித்ததிலிருந்து, தமிழகம் இன்றைக்கு அமைதிப் பூங்கா மாநிலமாக, ஜெயலலிதா எந்தளவிற்கு அரசை, சட்டம்-ஒழுங்கை, சட்டத்தின்படி ஆட்சி நடத்திட வேண்டுமென்று எண்ணி ஆட்சி செய்தார்களோ, அதன்படிதான் இன்றைக்கு அரசு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைப் பொறுக்க முடியாமல் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஏதாவது ஒரு பிரச்சினையை எழுப்பி, மக்களை திசை திருப்பி, தமிழகத்தில் அரசியல் இலாபம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அவர் கலந்து பேசி, இம்மாதிரியான சூழ்நிலையை தமிழகத்தில் ஏற்படுத்துகின்ற முயற்சியை முன்னெடுத்திருக்கின்றார்கள். இந்த ரத ஊர்வலம், ஐந்து மாநிலங்கள் வழியாக தமிழகத்தை வந்தடைகின்ற ஒரு சூழ்நிலை உள்ளது. அதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து மாநில அரசுகளும் அனுமதி கொடுத்துள்ளன. காங்கிரஸ் ஆளுகின்ற கர்நாடக மாநிலத்திலும்கூட அனுமதி கொடுக்கப்பட்டிருக்கின்றது.

தமிழக அரசு தடுக்கும்...

கம்யூனிஸ்டு ஆளுகின்ற மாநிலங்களில்கூட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களிலெல்லாம் ஊர்வலம் வந்து, அமைதியாக நடைபெற்றிருக்கின்றது. இங்கே காங்கிரஸ்காரர்களும், அவர்களோடு இணைந்து, எழுந்து கோஷம் போடுகின்ற ஒரு சூழலை ஏற்படுத்துவது, காங்கிரஸ் கட்சிக்கு உகந்ததுதானா என்பதை நீங்கள் சிறிதுகணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்றைக்கு நடைபெறும் சூழ்நிலையை நீங்கள் சொல்லுங்கள். இந்த ரத யாத்திரையின்போது, மதக் கலவரத்தைத் தூண்டுகின்ற வார்த்தைகளோ, இங்கே வாழுகின்ற மக்களைப் பிரித்தாளுகின்ற சூழ்நிலையை ஏற்படுத்துகின்ற வார்த்தைகளோ இருந்தால், தமிழக அரசு அதைக் கட்டுப்படுத்தி, தடுத்து நிறுத்தும் என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அவை குறிப்பிலிருந்து...

ஸ்ரீ ராமதாசா மிஷன் யூனிவர்சல் சொசைட்டி என்கிற ஒரு அறக்கட்டளை இந்த ஊர்வலத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அவர் பேசிய முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை, வன்முறையைத் தூண்டுகிற விதமாக இது இருக்கின்ற காரணத்தினால், அவை முழுவதையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென்று சட்டமன்றப் பேரவையின் தலைவரை கேட்டுக்கொள்கிறேன்.

பெரிய பாரம்பரியம்...

ஆகவே, காங்கிரஸ் கட்சியினுடைய நண்பர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நீங்கள் தீர யோசனை செய்து, இதில் நல்ல முடிவை எடுக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் தி.மு.க. எழுந்திருக்கும்போது, நீங்களும் எழுந்திருக்கின்ற ஒரு சூழ்நிலையை நீங்கள் கைவிட வேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கென்று மிகப் பெரிய பாரம்பரியம் இருக்கிறது, வழி இருக்கிறது, கொள்கை இருக்கிறது, கோட்பாடு இருக்கிறது. அவற்றையெல்லாம் நீங்கள் இங்கு சட்டமன்றத்தின் உள்ளே உட்கார்ந்து, காற்றில் பறக்கவிடுகின்ற ஒரு சூழ்நிலையை நீங்கள் உருவாக்கிவிடாதீர்கள் என்பதை இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

புத்திமதி செல்ல...

பேரவைத் தலைவர் அவர்களே, நீங்கள் மிகவும் பொறுமையாக 25 நிமிடங்கள், அவர்களுக்கு எவ்வளவோ அறிவுரைகள் சொல்லியும் கேட்காமல் இது மாதிரியான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அவர்களை மீண்டும் நீங்கள்அழைத்து, புத்திமதி சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து