முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

18 நாடுகளிலிருந்து 80 பேர் உளவுத் துறை மூலம் கடத்தல் துருக்கி துணை பிரதமர் அதிர்ச்சி தகவல்

வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

அங்காரா: துருக்கியில் கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக, 18 வெளிநாடுகளில் பதுங்கியிருந்த 80 துருக்கியர்களை உளவுத் துறையினர் ரகசியமாக நாடு கடத்தி வந்ததாக அந்த நாட்டு துணைப் பிரதமர் பெக்கீர் போஸ்தாக் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள இந்தத் தகவலை, நேற்று ஒளிபரப்பான தொலைக்காட்சி பேட்டியின்போது அவர் தெரிவித்தார்.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடையாதாக 6 துருக்கியர்களை செர்பியா நாட்டின் கொசோவோ மாகாணத்திலிருந்து கடத்தி வந்த தகவல் வெளியானதை அடுத்து, அந்த மாகாணத்தின் உள்துறை அமைச்சரும், உளவுத் துறை தலைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்தச் சூழலில் துணைப் பிரதமர் பெக்கீர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

ரகசியக் கடத்தல்கள் 18 நாடுகளில் நடத்தப்பட்டன என்று அவர் கூறினாலும், அந்த நாடுகளின் பெயரை பெக்கீர் குறிப்பிடவில்லை. எனினும், இதுபோன்ற கடத்தல் வேலைகளில் துருக்கி உளவுத் துறை தொடர்ந்து ஈடுபடும் என்று அவர் தெரிவித்தார்.

துருக்கியில், ராணுவம் மற்றும் காவல்துறையின் ஒரு பிரிவினர் அதிபர் எர்டோகன் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் கடந்த 2016-ஆம் ஆண்டில் ஈடுபட்டனர்.
எனினும், அந்த முயற்சியை அரசுப் படைகள் வெற்றிகரமாக முறியடித்தன. இந்த சம்பவத்தில் சுமார் 250 பேர் உயிரிழந்தனர்.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்துள்ள மதத் தலைவர் பெதுல்லா குலென் தூண்டி விடுவதாக துருக்கி குற்றம் சாட்டி வருகிறது. எனினும், அமெரிக்காவும், குலெனும் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து