நடிகை பிரியா வாரியருக்கு எதிராக மேலும் 2 வழக்கு

புது டெல்லி, மலையாள நடிகை பிரியா வாரியருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேலும் இரு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
மலையாளப் பட இயக்குநர் ஒமார் லூலு இயக்கும் ஒரு அடார் லவ் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள மாணிக்ய மலராய பாடல் யூ.டி.யூ.பி-ல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலில் நடித்திருந்த நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், புருவங்களை அசைத்தும், கண்ணடித்தும் ரசிகர்களைக் கவர்ந்தார். இந்தப் பாடல் நபிகள் நாயகத்தை தொடர்புபடுத்தி இஸ்லாமிய மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறி ஐதராபாத் மற்றும் மும்பையில் வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பிரியா வாரியரைக் கைது செய்வதற்குத் தடை விதித்தது.
இந்த நிலையில் மேலும் 2 வழக்குகள் பிரியா வாரியருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ளன. பிரியா வாரியருக்கு எதிராக ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த அமைப்பே தற்போது மீண்டும் புதிய 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
படமாக்கப்பட்டு வரும் ஒரு அடார் லவ் மலையாளப் படத்தில் வரும் பாடல் முகம்மது நபியையும் அவரது மனைவி கதீஜாவையும் இழிவுபடுத்துவது போல உள்ளது. இஸ்லாமியர்களின் உணர்வை பாதிக்கும் அந்தப் பாடலை உடனே படத்தில் இருந்து நீக்க வேண்டும். மேலும் கண்ணடித்தல் என்பது முஸ்லிம் மதத்துக்கு எதிரானதாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.